Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனு தள்ளுபடி!

03:39 PM Apr 29, 2024 IST | Web Editor
Advertisement

பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Advertisement

கடந்த ஏப். 21 ஆம் தேதி ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.  அப்போது அவர்,  காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களின் சொத்துகளை பறித்து அவற்றை ஊடுருவல்காரர்களுக்கும்,  அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் சமூகத்தினருக்கும் பகிர்ந்து அளித்து விடும்.  பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கூட கணக்கிட்டு காங்கிரஸ் பிரித்து கொடுத்து விடும் என கடுமையாக விமர்சித்திருந்தார்.

மோடியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.  மேலும் இதற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.  இதனையடுத்து தேர்தல் பிரசாரத்தின் போது மோடியின் பேச்சு பிரிவினையை தூண்டுவதாக  காங்கிரஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.  இதனையடுத்து தேர்தல் விதிகளை மீறியதாக ராகுல் காந்தி மீது பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த புகார்கள் குறித்து ஏப்ரல் 29-ஆம் தேதி காலை 11 மணிக்குள் பதிலளிக்க வேண்டும் என பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.  இந்த புகார்களின் மீது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், பாஜக தலைவர் நட்டாவும் பதிலளிக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.  மேலும், கட்சித் தலைவர்களின் பேச்சு கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வெறுப்பு பேச்சுக்கள் காரணமாக தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் எஸ்.ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்தார்.

பிரதமர் மோடி உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் பரப்புரையின் போது மதரீதியாக பிரச்சாரம் செய்ததாகவும் இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிரானது என்பதால் பிரதமர் மோடி,  6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி கடவுள் மற்றும் கோயில்கள் குறித்து பேசுவது வாக்காளர்களிடையே சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் வெறுப்பை உருவாக்கும் வகையில் உள்ளது எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.  இந்த மனுவின் மீதான விசாரணைக்கு பதிலளித்த நீதிபதி சச்சின் தத்தா இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்து கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறி தள்ளுபடி செய்தார்.

ஏனெனில் இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது.  மேலும் இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனுதாரர் மனு அளிக்கும்பட்சத்தில் அதன் மீது தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும்.

எனவே இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும்,  நீதிமன்றத்தின் உத்தரவு நியாயமான தேர்தல் நடப்பதை உறுதி செய்யும் எனவும் தெரிவித்தார்.

Tags :
Delhi high courtElection commissionElection2024Narendra MdoPMModiPrime Minister Modi
Advertisement
Next Article