யூடியூபர் துருவ் ரத்திக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்!
மும்பை பாஜகத் தலைவர் சுரேஷ் கரம்ஷி நகுவா தொடர்ந்த அவதூறு வழக்கில் பிரபல யூடியூபர் துருவ் ரத்திக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
பிரபல யூடியூபர் துருவ் ரத்தி தனது யூடியூப் பக்கத்தில் கடந்த ஜூலை 7ஆம் தேதி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் தன்னை வன்முறையாளர் என தவறாக சித்தரித்து, சமூகத்தில் தனது நற்பெயருக்கு குந்தகம் விளைவிப்பதாக பாஜகவின் மும்பை பிரிவு செய்தி தொடர்பாளர் சுரேஷ் கரம்ஷி நகுவா டெல்லி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் குப்தா யூடியூபர் துருவ்க்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதால் ரூ.20 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என நகுவா வழக்கு தொடர்ந்ததையடுத்து இந்த மனுமீது பதிலளிக்க துருவ்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 6ஆம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
ஹரியானாவை பூர்விகமாகக் கொண்ட துருவ் ரத்தி தற்போது ஜெர்மனியில் வசித்து வருகிறார். அவரை யூடியூப் சேனலில் 2.87 கோடி ஃபாலோவர்ஸ் உள்ளனர். கடந்த மக்களவைத் தேர்தலின்போது அவர் வெளியிட்ட வீடியோக்கள் இந்திய அரசியல் களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.