டெல்லி கார் வெடிப்பு சம்பவம் : மேலும் 4 பேரை கைது செய்த என்.ஐ.ஏ....!
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10ஆம் தேதி, மாலையில் கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் 13 பேர் பலியாகினர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலை நிகழ்த்தியது டாக்டர் உமர் முகமது என்ற பயங்கரவாதி என கண்டறியப்பட்டது. மேலும் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட காரை வாங்கி கொடுத்து உதவிய அமீர் ரஷித் அலி என்பவரையும் டெல்லியில் அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்நிலையில் இன்று இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. அதன் படி புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் முஸாமில் ஷகீல், அனந்த்நாக் பகுதியைச் சேர்ந்த டாக்டர் அதீல் அகமது ராதர், லக்னெளவைச் சேர்ந்த டாக்டர் ஷாஹீன் சயீத், ஷோபியான் பகுதியைச் சேர்ந்த முஃப்தி இர்பான் அகமது வாகே என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மருத்துவர்கள் 3 பேரை ஏற்கெனவே ஜம்மு-காஷ்மீர் காவல்துறை கைது செய்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவர்களை பாட்டியாலா நீதிமன்றத்தின் மாவட்ட அமர்வு நீதிபதிமன்றத்தின் முன் அஜர்படுத்திய என்.ஐ.ஏ, 4 பேரையும் விசாரணைக்காக காவலில் எடுத்துள்ளது.