" நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு ; அமித்ஷா பதவி விலக வேண்டும்" - திருமாவளவன் எம்பி
" நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்" என திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன் தினம் பார்வையாளர் மாடத்தில் இருந்த இருவர், அவைக்குள் குதித்து எம்.பி.க்களின் இருக்கைகள் மீது தாவிச் சென்று வண்ணப் புகை வெளியேற்றக்கூடிய சர்ச்சைக்குரிய பொருளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவசர அவசரமாக அவை ஒத்திவைக்கப்பட்டது.
இது தொடர்பாக பத்திரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ள விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளதாவது..
” நாடாளுமன்ற மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து புகை குண்டு வீசப்பட்ட நிகழ்வு உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புக் குறைபாட்டுக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலகவேண்டும் ; தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள 15 எம்.பிக்கள் மீதான நடவடிக்கையை உடனே ரத்து செய்யவேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் தலைவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்!
அதற்காக 14 மக்களவை உறுப்பினர்களும்; மாநிலங்களவை உறுப்பினர் ஒருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வெளி ஆட்கள் உள்ளே அத்துமீறி நுழைந்து புகைக் குண்டு வீசுவதற்கு அறிந்து அறியாமலோ காரணமாகவுள்ள பாஜக எம்.பி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, விளக்கம் கேட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது வெட்கக் கேடானது! இத்தகைய ஜனநாயகப் படுகொலைக்கு இரு அவைகளையும் வழிநடத்திய சபாநாயகர்கள் துணைபோவது அதிர்ச்சியளிக்கிறது. நாடாளுமன்றப் பாதுகாப்பில் நிலவும் குறைபாடு மற்றும் கவனக்குறைவுக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் பதவி விலக வேண்டும் என வலியுறுத்துகிறோம். அத்துடன், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீதான இடை நீக்க நடவடிக்கையை ரத்து செய்வதுடன், விதிஎண் 267 -இன் கீழ் அவையில் அது குறித்து விவாதம் நடத்த முன்வரவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்! “ என திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.