பெரியார் குறித்து அவதூறு பேசியதாக சீமான் மீது பல காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு!
பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழ்நாட்டில் பல காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாக பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து திராவிடர் கழகம் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் 3 காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சீமான் மீது மதுரை, திருநெல்வேலி, கடலூர் மாவட்ட காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. திராவிடர் கழகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் வன்முறையை தூண்டுதல், சமூக பதட்டத்தை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் திருநெல்வேலி தச்சநல்லூர் காவல் நிலையத்தில் பொது அமைதியை கெடுத்தல், கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் செயல்படுதல் ஆகிய 2 பிரிவுகளில் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வடலூர் காவல் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக ஆத்திரமூட்டம் வகையில் செயல்படுவது மற்றும் வேண்டுமென்றே ஒருவரை அவமதித்து அதன் மூலம் பொது அமைதியை குலைக்கும் வகையில் செயல்படுவது என 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், கோவை மாவட்டத்தில் நாதக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தடாகம், பெரியநாயக்கன் பாளையம், பொள்ளாச்சி கிழக்கு, ஆனைமலை, பொள்ளாச்சி மகாலிங்கபுரம், மேட்டுப்பாளையம் ஆகிய 6 காவல் நிலையங்களில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.