Deepfake சர்ச்சை: தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுகிறது – சச்சின் ஆதங்கம்!
AI தொழில்நுட்பத்தால் பாதிப்புக்குள்ளான நடிகை ராஷ்மிகா மந்தனாவைப்போல் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் சந்தித்துள்ளார்.
தற்போது மிகவும் டிரெண்டிங்கில் உள்ளது AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் Deep Fake என்ற செயலி. இதைப்பயன்படுத்தி எந்த ஒரு புகைப்படத்தையோ, அல்லது வீடியோவையோ மார்பிங் செய்து ரியலானது போல் உருவாக்க முடியும். இதை பயன்படுத்தி ஒருவரின் குரலை தங்களின் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ள முடியும். சமீபத்தில் கூட தமிழ் பாடல்களை பிரதமர் மோடியின் குரலில் மாற்றி அதனை இன்ஸ்டாகிராமில் வைரலாக்கி வந்தன.
அண்மையில், சினிமா நடிகை ராஷ்மிகா மந்தானாவின் போலி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. Deep Fake தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சினிமா நடிகை ராஷ்மிகா மந்தானாவின் முகத்தை வைத்து போலியாக உருவாக்கப்பட்ட வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.
இதையடுத்து, செயற்கை நுண்ணறிவு, டீப் ஃபேக் தொழில்நுட்பம், போலி வீடியோக்கள் தொடர்பான கவலைகள் எழுப்பப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, போலி வீடியோ தயாரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு, அது தொடர்பான அறிவுறுத்தல்களையும் வெளியிட்டது.
நடிகை ராஷ்மிகா மந்தனாவை தொடர்ந்து, கஜோல், பிரியங்கா சோப்ரா, ரத்தன் டாடா ஆகியோரின் போலி காணொலிகள் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கேமிங் செயலி ஒன்றை விளம்பரப்படுத்தும் விடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசல் சச்சினின் தோற்றம் மற்றும் குரலுடன் வெளியாகியுள்ள இந்த விடியோ டீப் ஃபேப் மீதான அச்சத்தை அதிகரிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“இந்த வீடியோக்கள் போலியானவை. தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துவதைப் பார்க்கும்போது கவலையாக இருக்கிறது. இது போன்ற வீடியோக்கள், விளம்பரங்கள் மற்றும் பயன்பாடுகள் ஆகியவற்றை அதிக எண்ணிக்கையில் புகாரளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். சமூக ஊடக தளங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் புகார்களுக்கு பதிலளிக்க வேண்டும். தவறான தகவல்கள் மற்றும் ஆழமான போலிகள் பரவுவதைத் தடுக்க அவர்களின் முடிவில் இருந்து விரைவான நடவடிக்கை முக்கியமானது, ”என்று சச்சின் தனது எக்ஸ் பக்கத்தில் சமூக ஊடக இடுகையில் கூறினார்.
இந்த வீடியோவில் சச்சின் தனது பதிவின் மூலமாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் மகாராஷ்டிரா சைபர் கிரைம் ஆகியோரையும் எச்சரித்தார். டிசம்பர் 2023 இல் ஒரு ஆய்வின்படி, டீப்ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அடையாளம் காணும் மோசடியால் பாதிக்கப்படும் ஆசியாவின் முன்னணி நாடுகளில் இந்தியாவும் உள்ளது.