டாவோஸ் உச்சி மாநாடு - தமிழ்நாட்டின் உற்பத்தி திறனை உலகிற்கு காட்டிய அமைச்சர் டிஆர்பி ராஜா!
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நேற்று தொடங்கிய உலகப் பொருளாதார அமைப்பின் உச்சி மாநாடு ஜன.24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் தென் மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களின் அமைச்சர்கள் கலந்து கொண்டு பல்வேறு முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் இன்று இந்த மாநாட்டில் பேசிய தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா,
“முதலீடுகளை ஈர்ப்பதில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு என மாநிலங்களுக்கு இடையேதான் போட்டி இருக்க வேண்டும். வியட்நாம், மலேசியா போன்ற மற்ற நாடுகளிடம் முதலீடுகளை இழக்க கூடாது. அரசியல் என்பது வேறு; இந்தியா என்று வரும்போது நாம் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்.
உற்பத்தித் துறையில் தமிழ்நாடு இன்று முன்னிலை மாநிலமாக விளங்கி வருகிறது. மக்கள், திறமை, கல்வியின்மீது செய்த முதலீடுகள்தான் இதற்கு காரணம். எல்லோருக்கும் குறிப்பாக, பெண்களுக்கு கல்வியை சாத்தியப்படுத்த வேண்டும்.
இந்தியாவில் Organized Sector-ல் பணிபுரியும் 43% பெண்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெண்கள் படித்தவர்களாக இருந்தால், அதிகாரத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.
உலகிற்கு உற்பத்தி செய்து கொடுத்தது போதும். நாம் நமக்கான தேவைகளை, பொருட்களை நாமே உற்பத்தி செய்ய வேண்டும். நம்மிடம் அதற்கான ஆற்றல் உள்ளது. நம்மிடம் உள்ள திறமைகளை ஏன் மற்ற நாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்த கொடுக்க வேண்டும்?
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் (R&D) நாம் இன்னும் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும். உலகிற்கான கொள்கைகளை இந்தியா உருவாக்க தொடங்க வேண்டும்” என கூறியுள்ளார்.
இந்த மாநாட்டில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், அம்மாநில அமைச்சர் உதய் சமந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர்.