புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிகட்டிற்கான தேதிகள் அறிவிப்பு!
புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டிகளுக்கான தேதிகளை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் பிரசித்திப் பெற்றவை. அதிலும் குறிப்பாக அவனியாபுரம், பாலமேடு, அலங்கநல்லூர் போன்ற ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டிற்கு தமிழ்நாடு மட்டுமல்ல வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ரசிகர்கள் வருவது வழக்கம்.
பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகளை கால்நடை துறையினர் பரிசோதனை செய்யும் நிகழ்வுகள் அவனியாபுரம் போன்ற இடங்களில் நடைபெற்றது.
இந்த நிலையில் புகழ்பெற்ற மதுரை ஜல்லிகட்டு போட்டிகளின் தேதிகள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அவனியாபுரம் ஜல்லிகட்டு ஜனவரி 15ம் தேதியும், பாலமேடு ஜல்லிக்கட்டு ஜனவரி 16ம் தேதியும், அலங்காநல்லூர் ஜல்லிகட்டு ஜனவரி 17ம் தேதியும் நடைபெறும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள மந்தை திடலிலும், பாலமேடு ஜல்லிக்கட்டு மஞ்சமலை ஆறு திடலிலும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோட்டை முனி வாசல் மண்டை திடல்லும் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வருடந்தோறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பாரம்பரியமாக நடைபெறும் அந்தந்த இடங்களிலேயே இந்த வருடமும் சிறப்பாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பதிவு குறித்து சம்மந்தப்பட்ட துறையின் மூலமாக விரைவில் அறிவிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.