கடும் குளிரிலும் தரிசனம் | 1.21 லட்சம் ஐயப்ப பக்தர்கள் முன்பதிவு!
கனமழையால் பக்தர்கள் கடும் குளிர் மற்றும் சிரமத்தை சந்தித்தாலும் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ம் தேதி திறக்கப்பட்டது. முதல் நாளிலிருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகமாக
காணப்பட்டு வருகிறது.
தற்பொழுது வடகிழக்கு பருவமழை காரணமாகவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும் தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலை சபரிமலையில் கன மழை பெய்த நிலையிலும் 35 ஆயிரம் பக்தர்கள் மழையை பொருட்படுத்தாமல் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர்.
மேலும் இன்றும், நாளையும் 1,21,000 பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். இதனால் காலை 3 மணியிலிருந்து ஐயப்பனை காண நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்துள்ளனர். பம்பையிலிருந்து சபரிமலைக்கு மலைப்பாதையில் ஏறி வரும் பக்தர்கள் மிகுந்த கவனத்துடன் ஜாக்கிரதையாக சபரிமலைக்கு வர வலியுறுத்தப்பட்டுள்ளது.
பக்தர்கள் வரும் பாதைகளில் மழையின் காரணமாக மரம் முறிந்து விழுந்து இருந்தாலும் மண் சரிவு ஏற்பட்டு இருந்தாலும் அதனை சரி செய்ய ஆங்காங்கே பேரிடர் மேலாண்மை குழுவினரும், தீயணைப்புத் துறையினரும், அரசு அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர்.