“கேப்டன் மில்லர் படத்தில் தனுஷின் லுக் பார்த்து பயமாக உள்ளது” - இயக்குநர் மாரி செல்வராஜ் பேச்சு!
இந்த படத்தில் தனுஷின் லுக் பார்த்து என்ன பண்ணப்போகிறார் என்று பயமாக உள்ளது. கர்ணனுக்கு பிறகு தனுஷுடன் படம் பண்ண இருந்தேன் என இயக்குநர் மாரிசெல்வராஜ் தெரிவித்துள்ளார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் சுமேஷ் மூர், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தனுஷின் பிறந்தநாளன்று திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ஜனவரி 12 அன்று திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் முன் வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்தது. அதன்படி இன்று விழா ஆரம்பிப்பதற்கு முன்னதாக மறைந்த நடிகர்கள் விஜயகாந்த் மற்றும் புனித் ராஜ்குமார் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி ஆரம்பிக்கப்பட்டது.
விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் மாரி செல்வராஜ் பேசியதாவது:
“இது எங்கள் குடும்ப நிகழ்ச்சி. தனுஷ் பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். இந்த படத்தில் அவரது லுக் பார்த்து என்ன பண்ணப்போகிறார் என்று பயமாக உள்ளது. கர்ணனுக்கு பிறகு தனுஷுடன் படம் பண்ண இருந்தேன். நான் வேறுபடம் பண்ண போனபோது சரி என்றார். அவருக்கு என் மீது நம்பிக்கை கூடிக்கொண்டே போகிறது. அந்த நம்பிக்கையை காப்பாற்றுவேன். கர்ணன் படத்தில் பசியுடன் வேலை வாங்கினேன். கேப்டன் மில்லர் போன்ற இரையை உங்களுக்கு கொடுக்க நினைக்கிறேன்.
கமர்ஷியல் அந்தஸ்து உள்ள நாயகன் சாதாரண சிறிய படத்தை பார்த்து பேசுவார். சிறிய படங்கள் எத்தனை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணரக்கூடியவர் தனுஷ். தூத்துக்குடியில் வெள்ளம் வந்தபோது தனுஷ் தான் உடனே போன் செய்தார். நீங்கள் நல்ல வேலை செய்து வருகிறீர்கள் சூப்பர் என்றார். ரொம்ப பெருமையாக இருப்பதாக சொன்னார். கேப்டன் மில்லர் மிகப் பெரிய வெற்றியடையும்.” இவ்வாறு தெரிவித்தார்.