ஏரியில் கொட்டப்பட்ட இறைச்சி, மருத்துவகழிவுகள் - நோய்தொற்று ஏற்படும் என பொதுமக்கள் அச்சம்!
சென்னையை அடுத்த பெருங்களத்தூர் அப்துல்கலாம் பூங்கா அருகே உள்ள ஏரியில் இறைச்சி கழிவுகள், மருத்துவகழிவுகள் கொட்டப்படுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தாம்பரம் மாநாகராட்சி 4-வது மண்டலம், 58-வது வார்டில் உள்ள அப்துல்காலம் பூங்கா
அருகே பத்திரகாளியம்மன் கோயில் மற்றும் ஏரி உள்ளது. இந்த நிலையில் இந்த குளத்தில் டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ஏரியின் உள்ளேயே இறைச்சி கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகளும்
கொட்டப்படுவதால் ஏரியின் தண்ணீரும் கடுமையாக மாசு அடைந்துள்ளது. அதேபோல் பத்திரகளியம்மன் கோவில் செல்லும் சாலைகளிலும் டன் கணக்கில் குப்பைகள்
கொட்டப்பட்டிருப்பதால் கோவிலுக்குள்ளே பக்தர்கள் செல்லமுடியாத சூழ்நிலை
ஏற்பட்டுள்ளது. திடகழிவுகளை கொட்டுவதற்கு முறையாக ஒதுக்கப்பட்ட இடத்தில் கொட்டாமல் ஏரிகளில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழலுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு தீங்குகளை விளைவிப்பததாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் இங்கு கொட்டப்படும் குப்பைகள் அகற்றப்படாததால் திடக்கழிவுகளாக மாறி
கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுக்கள், ஈக்கள் மற்றும் பாக்டீரியாக்கள் உருவாகி பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் எனவும், மாநகராட்சி சுகாதாரத்துறையினர் உடனடியாக இந்த பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றி ஏரியை சுத்தம் செய்யவேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.