தினமும் 4 மணி நேர தாக்குதல் நிறுத்தம்: இஸ்ரேல் ஒப்புதல்!
காஸா பகுதியிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு வசதியாக, தினமும் 4 மணி நேரத்துக்கு தாக்குதல் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அக். 7-ம் தேதி இஸ்ரேல் மீது காஸா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக போர் அறிவித்து ஒரு மாதத்துக்கும் மேலாக காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதுவரை (நவ.7) 10,328 பேர் பலியானதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதில், 4,237 பேர் குழந்தைகள். கடல், வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து தற்போது தரை வழியாக தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல் ராணுவம், காஸாவின் மருத்துவமனைகள், மசூதிகள், முகாம்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது.
இதனால், காஸா மருத்துவமனைகள் அடிப்படை வசதிகளின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஹமாஸுக்கு எதிராக தங்கள் நாட்டு ராணுவம் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டு வரும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்காக, 2வது பாதுகாப்பு வழித்தடத்தை இஸ்ரேல் திறந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினரின் கோட்டையாகத் திகழும் காஸா சிட்டிக்குள் நுழைந்து அந்த நகரை நோக்கி இஸ்ரேல் ராணுவம் முன்னேறி வருகிறது.
இந்நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேறுவதற்கு வசதியாக தினமும் 4 மணி நேரத்துக்கு தாக்குதல் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அரசு தற்போது அறிவித்துள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசி மூலம் அதிபர் ஜோ பைடன் தொடர்பு கொண்டார். அப்போது, காஸாவிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு வசதியாக தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு அந்தப் பகுதியில் தாக்குதலை நிறுத்திவைக்க வேண்டும்” என்று நெதன்யாகுவை பைடன் கேட்டுக்கொண்டார்.
அதனை ஏற்று, தினமும் 4 மணி நேரத்துக்கு காஸாவில் தாக்குதலை நிறுத்திவைக்க இஸ்ரேல் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.