திருவண்ணாமலை தீபத் திருவிழா; சிப் பொருத்தப்பட்ட அனுமதிச் சீட்டுகள் - அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்!
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு வரும் உபயதாரர்கள், கட்டளைதாரர்களுக்கு சிப் பொருத்தப்பட்ட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட உள்ளது. இந்தச் சீட்டுகளை ஸ்கேன் செய்த பிறகே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.
அருணாசலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழாவுக்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் நவம்பர் 16 ஆம் தேதி நடைபெற்றது.
கூட்டத்துக்கு, தமிழ்நாடு பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் கூறியதாவது:
தீபத் திருவிழா தேரோட்டத்துக்கு முன்னதாக தேர்களின் மராமத்துப் பணிகளை விரைந்து செய்து முடிக்க வேண்டும். நவம்பர் 26-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சந்நிதியில் பரணி தீபதரிசனம், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
இந்த தீப தரிசனத்தை அனைவரும் காணும் வகையில் அதிநவீன திரை மூலம் கோயில் உள்புறமும், கோயிலின் 4 கோபுரங்களின் முன்புறமும், தற்காலிகப் பேருந்து நிலையங்களிலும் என 20 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பரணி தீப டிக்கெட்டுகள் விற்பனை:
நவம்பர் 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு 500 எண்ணிக்கையிலான பரணி தீப கட்டண டிக்கெட்டுகள் மற்றும் மகா தீப கட்டண டிக்கெட்டுகளை இணையதள முகவரி மூலம் முன்பதிவு செய்து பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
623 கண்காணிப்பு கேமராக்கள்:
அருணாசலேஸ்வரர் கோயில் வளாகம், 4 கோபுர நுழைவு வாயில்கள், சந்நிதி நுழைவு வாயில்கள், வடக்கு மற்றும் தெற்கு ஒத்தவாடை தெருக்கள், பே கோபுரத் தெரு, ராஜகோபுரம் முன்புறம், சுவாமி வீதியுலா வரும் மாட வீதிகள், பஞ்சமூர்த்திகள் அலங்காரம் செய்யப்படும் திருக்கல்யாண மண்டபம், கிரிவலப்பாதை சுற்றி என மொத்தம் 623 இடங்களில் தற்காலிக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.
கலை நிகழ்ச்சிகள்:
தீபத் திருவிழாவையொட்டி நவம்பர் 17-ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை கலைஞர்களின் சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சிகள், பரத நாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
கோயில் கலையரங்கம், ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வர் சந்நிதி புதிய மேடையில் நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
13 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு:
தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் 13 ஆயிரம் போலீஸார் ஈடுபடுகின்றனர். காவல்துறை சார்பில் 4 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
'சிப்' பொருத்தப்பட்ட அனுமதிச் சீட்டு:
தீபத் திருவிழாவுக்கு வரும் உபயதாரர்கள், கட்டளைதாரர்களுக்கு 'சிப்' பொருத்தப்பட்ட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட உள்ளது. இந்தச் சீட்டுகளை ஸ்கேன் செய்த பிறகே கோயிலுக்குள் செல்ல முடியும். தீபத் திருவிழாவின்போது, மலை மீது ஏறிச் செல்ல 2, 500 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றனர்.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா பா.முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் க.வீ.முரளிதரன், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, கோயில் இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழுத் தலைவர் இரா.ஜீவானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.