வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு!
வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.101.50 உயர்ந்துள்ளதால், வணிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. இதில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை தினந்தோறும் என்ற அடிப்படையிலும், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மாதத்துக்கு 2 முறை என்ற அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படுகிறது.
உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கியதையடுத்து, கச்சா எண்ணெய் விலை அதிகரித்து, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை பன்மடங்கு உயர்ந்தது. எனினும், கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியதையடுத்து, கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்படவில்லை.
இந்நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கியது முதல் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதையொட்டி வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தற்போது உயர்த்தியுள்ளன. இதன்படி, 19 கிலோ எடையுள்ள வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.101.50 உயர்த்தப்பட்டுள்ளது. அதன் விலை ரூ.1,898-ல் இருந்து, ரூ.1,999-ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றம் ஏதுமின்றி தொடர்ந்து ரூ.918.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.