CUET PG தேர்வு முடிவுகள் வெளியீடு!
கியூட் முதுகலை தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை தனது அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
2022- 23-ம் கல்வி ஆண்டு முதல் மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் நடத்தப்படும் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு (Common University Entrance Test – CUET) கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதேபோல், தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிலையங்களும் க்யூட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. CUET (PG) 2024 மதிப்பெண் அட்டையின் அடிப்படையில் தனிப்பட்ட கவுன்சிலிங் முடிவுகள் பல்கலைக்கழகங்களால் எடுக்கப்படும்.
இந்த ஆண்டுக்கான CUET (PG) தேர்வு மார்ச் 11 முதல் மார்ச் 28 வரை கணினி அடிப்படையிலான தேர்வாக (CBT) இந்தியா மற்றும் வெளிநாடுகளில், 262 நகரங்களில் 572 மையங்களில் நடத்தப்பட்டது. இந்த தேர்வினை எழுத 4.6 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இது முந்தைய ஆண்டு பதிவான, 4.5 லட்சத்தை காட்டிலும் சற்றே அதிகமாகும். மொத்தம் பதிவு செய்த 4 லட்சத்து 62 ஆயிரத்து 603 விண்ணப்பதாரர்களுக்காக, 7 லட்சத்து 68 ஆயிரத்து 414 தேர்வுகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தேசிய தேர்வு முகமை (NTA) CUET 2024 முதுகலை தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் pgcuet.samarth.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தங்களது தேர்வு முடிவுகளை அறியலாம். மாணவர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும். தேர்வு நடைபெற்ற 157 பாடங்களிலும் முதலிடம் பிடித்த மணவர்களின் விவரங்களும், அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.