ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், முதலாவதாக களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்தது. எனவே சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 166 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய ஐபிஎல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 18வது லீக் போட்டி இன்று (ஏப். 5) தெலங்கானாவில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடுகின்றன.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்ற நிலையில், கடைசியாக டெல்லி கேபிட்டல்ஸ் அணியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள சிஎஸ்கே 4 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறது. ஹைதராபாத் அணி 7வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ரச்சின் ரவிந்தரா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் களமிறங்கினர். அதிரடியாக பவுண்டரி விளாசி வந்த ரச்சின் ரவீந்திரா தனது விக்கெட்டினை 12 ரன்களில் புவனேஷ்வர் பந்தில் இழந்து வெளியேறினார். 7வது ஓவரில் கேப்டன் ருதுராஜ் தனது விக்கெட்டினை 21 பந்தில் 26 ரன்கள் சேர்த்து தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
10 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் சேர்த்து விளையாடியது. அதிரடியாக விளையாடிய ஷிவம் துபே 24 பந்துகள் களத்தில் நின்று, 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என மொத்தம் 45 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து ரஹானே 14 வது ஓவரில் 35 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
16 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 18 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டினை இழந்து 152 ரன்கள் சேர்த்தது. 19.3 ஓவரில் டேரில் மிட்செல் 11 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியாக தோனி களமிறங்கினார். மொத்தமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சிவம் துபே 45 ரன்கள் எடுத்திருந்தார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 166 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.