CSKvsKKR | கொல்கத்தா பந்து வீச்சு தேர்வு - சென்னை அணியை தோல்வியில் இருந்து மீட்டெடுப்பாரா கேப்டன் தோனி!
நடப்பாண்டு ஐபிஎல் சீசனுக்கான லீக் சுற்று நடைபெற்று வரும் நிலையில், சென்னை - கொல்கத்தா அணிகள் இன்று(ஏப்ரல்.11) சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளன. இதுவரை ருதுராஜ் கெய்க்வாட் வழிநடத்திய சென்னை அணி 5 போட்டிகளில் பங்கேற்று ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. இதன் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 9 வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
இந்த சூழலில் சென்னை அணியை மீண்டும் தோனி கேப்டனாக வழிநடத்துவார் என்று அணியின் நிர்வாகம் நேற்று(ஏப்ரல்.10) அறிவித்தது. இன்று நடைபெறவுள்ள சென்னை - கொல்கத்தா அணி இடையேயான போட்டியில் தோனி தனது தலைமையில் வெற்றி பெறச் செய்வார் என ரசிகர் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். கொல்கத்தா அணி இதுவரை பங்கேற்ற லீக் போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. சென்னை அணியில் ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அகமது, அன்ஷுல் காம்போஜ், கலீல் அகமது ஆகியோர் விளையாட உள்ளனர்.
அதே போல் கொல்கத்தா அணியில் சுனில் நரைன், குயின்டன் டி காக், அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ரமண்தீப் சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், மொயீன் அலி, ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.