சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு ஒத்திவைப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!
சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு தேதி ஒத்தி வைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி பெருவதற்கான தகுதியைத் தீர்மானிப்பதற்காக தேசிய தேர்வு முகமை சார்பில் யுஜிசி நெட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு நாடு முழுவதும் இரண்டு ஷிப்ட்களாக கடந்த 18ம் தேதி நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளாக கணினி வழியாக நடைபெற்ற நெட் தேர்வு இம்முறை ஓஎம்ஆர் சீட் முறையில் நடைபெற்றது.
தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தேசிய சைபர் குற்றப் பிரிவிலிருந்து தகவல் வந்திருப்பதாகவும், இதனால் மத்திய கல்வி அமைச்சகமும், மத்திய அரசும் இணைந்து இந்த ஆண்டுக்கான நெட் தேர்வை ரத்து செய்வது என முடிவு செய்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதனிடைய, சில அறிவியல் பாடங்களுக்கான உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நடத்தப்படும் சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு வரும் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை இன்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுவதாவது,
``ஜூன் 25,26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்ட சிஎஸ்ஐஆர் நெட் 2024 தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு வினாத்தாள், டார்க்நெட் என்னும் ரகசிய வலைதளத்தில் கசிந்துள்ளது. சமூக ஊடகமான டெலிகிராமிலும் வினாத்தாள் பரவியுள்ளது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் வினாத்தாள் கசிந்த விவகாரம் உறுதிசெய்யப்பட்டது. இதனால் தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது” என்று தெரிவித்தார். மேலும், சிஎஸ்ஐஆர் நெட் தேர்வுக்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.