90 டிகிரி பாலத்திற்கு எழுந்த விமர்சனங்கள் - மறுகட்டமைப்புக்கு தயாரான மத்திய பிரதேச அரசு!
பாஜக ஆட்சி செய்யும் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஐஷ்பாக் பகுதியில் 90 டிகிரில் எல் வடிவ மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆகஸ்ட் முதல் 2025 வரை ரூ.18 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த பாலம் கடந்த ஜூன் 15 ஆம் தேதி திறக்கப்பட திட்டமிடப்பட்டது.
இருப்பினும், திறப்பு விழாவிற்கு முன்பாக பாலத்தின் குறைபாடுள்ள வடிவமைப்பின் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பரவலான விமர்சனங்களைத் தூண்டின. மேலும் பொதுமக்கள் மட்டும் எதிர்க் கட்சியினர் கட்டுமான பணிகள் குறித்து கடும் விமர்சனங்களை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இந்த பாலத்தின் மறுகட்டமைப்பு பணிகள் நடைபெறும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மத்தியப் பிரதேச பொதுப்பணித் துறையால் கட்டப்பட்ட இந்தப் பாலம், மணிக்கு 35 கிமீ வேகத்திற்கு மேல் பயணிக்கும் வாகனங்களுக்குப் பாதுகாப்பற்றது என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்த பிறகு, இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டுமான பணிகளை முடிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.