Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”நான்கு ஆண்டுகளில் நெருக்கடிகள் வந்தது” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு!

நான்கு ஆண்டுகளில் நெருக்கடிகள் வந்தது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
03:43 PM May 06, 2025 IST | Web Editor
Advertisement

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, கலைவாணர் அரங்கில் பத்திரிகையாளர்கள் மற்றும்  ஊடகத்துறையினர் சந்தித்து பேசினார்.

Advertisement

அவர் கூறியதாவது, “2021-ல் தமிழ்நாட்டில் மக்களுடைய நம்பிக்கையையும், ஆதரவையும் பெற்று, ஆறாவது முறையாக திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைந்தது. மே 7-ஆம் நாள் நான் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டேன். நாளைக்கு மே 7. திமுக அரசு ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கப்போகிறது.

தேர்தல் அறிக்கையில் சொன்ன பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல திட்டங்களையும் தொலைநோக்குப் பார்வையோடு அதையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும், புதிய புதிய திட்டங்களை அறிவிக்கிறோம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் சாதனைத் திட்டத்தின் தொடக்கத்திற்கான நாளாக இருந்து கொண்டிருக்கிறது.

நாம் எந்த மாதிரியான சூழலில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றோம் மற்ற எல்லோரையும் விட பத்திரிக்கையாளர்களான உங்களுக்கு தான் நன்றாக தெரியும். முந்தைய ஆட்சியாளர்களால் சீரழிந்த பத்தாண்டு கால நிர்வாகம் ஒருபக்கம். மதவாதம் உள்ளிட்ட பிற்போக்குத்தனங்களுக்கு இடமளித்து, இந்திய நாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கக்கூடிய அந்த நிலை ஒரு பக்கம். தமிழ்நாட்டுக்கு எந்தவித ஒத்துழைப்பையும் தர மறுக்கும் மத்திய அரசின் இன்னொரு பக்கம்!

இதையெல்லாம் சமாளித்து நாம் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு போகவேண்டும் என்ற எண்ணம்தான் எனக்குள் இருந்தது. சரியான இலக்கை நிர்ணயித்து, அதனை நோக்கி உறுதியாக பயணித்து, நிச்சயம் சாதிக்க முடியும் என்பதற்கு இந்த நான்காண்டு கால திமுக அரசே சாட்சியாக அமைந்திருக்கிறது!.

அரசுகளை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று, கொள்கை அரசு!
இன்னொன்று, சேவை அரசு! நம்முடைய திமுக அரசைப் பொறுத்தவரைக்கும். கொள்கை - சேவை இரண்டிலும் சிறந்து விளங்குகின்ற அரசாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நான்காண்டுகளில் எப்படிப்பட்ட நெருக்கடிகள் எல்லாம் வந்தது, எவ்வளவு அவதூறுகள் பரப்பப்பட்டது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். நாங்கள் கொள்கையில் தடம் மாறவில்லை. எந்தச் சூழ்நிலையிலும் மக்களுக்கான சேவைகளை வழங்குவதில் நாங்கள் சோர்ந்து போகவில்லை.  அதனுடைய வெளிப்பாடுதான் நம்முடைய அரசின் முத்திரைத் திட்டங்கள்.

புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் நான் முதல்வன் திட்டம் என்று ஏராளமான திட்டங்களை வரிசைப்படுத்தி சொல்லிக் கொண்டே இருக்க முடியும்.
இந்தத் திட்டங்களை பற்றியெல்லாம். இங்கு வந்திருக்கும் முக்கியமான துறை அமைச்சர்கள் விளக்குவார்கள். அதேபோல், அதிகாரிகளும் அதைப்பற்றி விளக்கி கூறுவார்கள். இந்தச் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் உங்களுடைய பங்கு மிக அதிகம் அதற்கு நன்றி.

என்னைப் பொறுத்தவரைக்கும் விமர்சனங்களை முன்வைத்தால், அதனை ஆக்கபூர்வமாக நான் ஏற்றுக்கொள்கிறவன். ஆலோசனைகள் இருந்தால், அதை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டிருக்கிறேன். உங்களுக்கு என்னுடைய அன்பான வேண்டுகோள் என்னவென்றால் இந்தியாவிற்கே முன்மாதிரியாக பல திட்டங்களைச் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். நம்முடைய திட்டங்களை பார்த்து, பல்வேறு மாநில அரசுகள் அந்த திட்டங்களை அவர்கள் மாநிலங்களிலும் செயல்படுத்துகிறார்கள்.

அப்படிப்பட்ட திட்டங்களை மனப்பூர்வமாக பாராட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். விமர்சிக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. என்னுடைய 60 கால அரசியல் வாழ்க்கையே விமர்சனங்களால் செதுக்கப்பட்டிருப்பது உங்களுக்கு தெரியும். எனவே. நம்முடைய அரசின் திட்டங்களை இன்னும் செம்மைப்படுத்துவதற்கான கருத்துகள் ஆலோசனைகள் இருந்தால் நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள் அந்த திட்டங்களை இன்னும் சிறப்பாக செயல்படுத்துவோம்.

எல்லோருடைய கருத்துகளையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் நான் கவனமாக இருக்கிறேன். ஆனால், சில ஊடகங்கள் விமர்சிப்பதில் காட்டும் ஆர்வத்தை, நல்ல திட்டங்களை பாராட்டுவதில் சில ஊடகங்கள் அதிகம் கவனம் செலுத்துவது இல்லை. எல்லோரையும் சொல்லவில்லை. பாராட்டுவதில் மட்டும் மென்மையான போக்கைத்தான் கடைப்பிடிக்கிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை? பாராட்ட வேண்டியதை பாராட்டினால் தான். விமர்சனத்திற்கான மரியாதையும் மதிப்பும் கிடைக்கும்! எனவே, தயாங்காமல் விமர்சிப்பது போன்று. தயங்காமல் பாராட்டுங்கள் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் எதிர்காலத்தை மேலும் வலுப்படுத்த உங்களுடைய ஆழமான பரந்துபட்ட பார்வையும் அனுபவமும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக நிச்சயமாக இருக்கும்.  சமத்துவம் சமூகநீதி மதச்சார்பின்மை மொழிப்பற்று சமதர்மம் சகோதரத்துவம் இன உரிமை மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி ஆகிய அரசியல் பண்பாடுகளைக் கொண்ட மண், நம்முடைய தமிழ்நாடு!
இந்த இலட்சியங்களை அடையும் பயணத்தில் நாங்கள் இருக்கிறோம்.

இந்தப் பயணத்தில், ஊடகங்களான உங்களின் பங்கு மிகவும் முக்கியமானது.
எனவே, தனிப்பட்ட ஸ்டாலினையோ திமுக அரசையோ நீங்கள் பாராட்ட வேண்டும் என்று நான் கேட்கவில்லை; தமிழ்நாட்டை பாராட்டுங்கள் என்றுதான் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் தனித்துவத்தையும் மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் துணையோடு தமிழ்நாட்டை நிச்சயம் வளர்த்தெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது”

இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags :
DMKMediaMKStalin
Advertisement
Next Article