#INDvsBAN : 14 ஆண்டுகளுக்கு பின்னர் குவாலியர் மைதானத்தில் கிரிக்கெட்... வெற்றி வாகை சூடுமா இந்தியா?
மத்தியப்பிரதேச மாநிலத்திலுள்ள குவாலியர் மைதானத்தில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் அமைந்துள்ளது கேப்டன் ரூப் சிங் மைதானம். பல மறக்கமுடியாத கிரிக்கெட் தருணங்களைக் கண்ட இந்த மைதானம், முதலில் ஹாக்கி ஸ்டேடியமாக இருந்தது. இரண்டு முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவரும், ஹாக்கி ஜாம்பவான் தியான் சந்தின் இளைய சகோதரருமான ரூப் சிங்கின் நினைவாக இந்த மைதானத்திற்கு கேப்டன் ரூப் சிங் மைதானம் என பெயரிடப்பட்டது.
நிறவெறிக் கொள்கையின் காரணமாக சுமார் இரண்டு தசாப்தங்களாக சர்வதேச போட்டிகளில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்ட தென் ஆப்பிரிக்க அணி, இந்த குவாலியர் மைதானத்தில் கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி இந்தியா அணியுடன் மோதியது. இதுதான் அந்த மைதானத்தில் நடைபெற்ற கடைசிப்போட்டி. இதில் சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் அடித்தார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக இரட்டை சதமடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
பின்னர் அந்த மைதானம் இடிக்கப்பட்டு, புதிதாக கட்டமைக்கப்பட்டது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்ததால் 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்தியா அங்கு விளையாட உள்ளது. இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதிக்கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை (அக். 6) இந்த மைதானத்தில் நடைபெறுகிறது.