பிறை தென்படவில்லை - ஞாயிறு முதல் ரமலான் நோன்பு தொடக்கம்!
இஸ்லாமியர்களின் புனித மாதமாக கருதப்படுவது நோன்பு மாதமான ரமலான். இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் இந்த மாதத்தில் தான் அருளப்பட்டது என்பதால், இஸ்லாமியர்கள் இந்த மாதத்தை புனித மாதமாக கருதி, மாதம் முழுக்க நோன்பினை கடைபிடிப்பார்கள்.
இஸ்லாமிய வழக்கத்தில் சந்திரனின் பிறை பார்க்கப்பட்டு மாதம் கணக்கிடப்படுகிறது. அதன்படி மாத்ததின் முடிவில் பிறை தென்பட்டால் ஒரு மாதத்தின் நாட்களை 29-தோடு நிறுத்திக் கொள்வர். பிறை தென்படவில்லை என்றால் 1 நாளை சேர்த்து 30-ஆக பூர்த்தி செய்வர்.
இந்நிலையில் 8வது மாதமான மாதமான ஷஃபான் மாதம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து ரமலானுக்காக இன்று தமிழ்நாடு முழுவதும் பிறை பார்க்கப்பட்டது. ஆனால் பிறை தென்படாததால் ஷஃபான் மாதத்தை 30 நாளாக் பூர்த்தி செய்வதாக தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி சுல்தான் சலாஹுதீன் அய்யூப் அறிவித்துள்ளார்.
எனவே ரமலான் மாதத்தின் முதல் நோன்பு நாளை மறுநாள் ( ஞாயிற்றுக் கிழமை ) முதல் கடைபிடிக்கப்படும்.
ரமலான் மாதத்தில் எவ்வாறு நோன்பு கடைபிடிப்பர்?
அதிகாலை சூரியன் உதயமாவதற்கு முன்பு சஹர் எனப்படும் அந்த நேரத்திற்கான உணவுகளை உட்கொண்டு நோன்பினை தொடங்குவார்கள். மாலை சூரியன் மறைந்ததும் இஃப்தார் எனப்படும் நோன்பு திறக்கும் நேரத்தில் பேரித்தம் பழத்தை முதல் உணவாக எடுத்துக் கொண்டு நோன்பினை முடித்துக் கொள்வார்கள். இந்த சுழற்சி முறையை முஸ்லிம்கள் ஏறத்தாழ ஒரு மாத காலம் கடைபிடிப்பர்.
முடிவில் மீண்டும் அடுத்த மாதமான ஷவ்வால் மாதத்தின் பிறையை வானில் தேடத் தொடங்குவார்கள். பிறை தென்படவில்லை எனில் ரமலான் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து 30நோன்புகளை கடைபிடிப்பார்கள். ஒருவேளை பிறை தென்பட்டால் அடுத்த நாள் ரம்ஜான் பெருநாளை கொண்டாடுவார்கள்.