மீண்டும் திறக்கப்பட்டது கோவை குற்றாலம் அருவி - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த ஒரு வாரமாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் அருவி, இன்று முதல் திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம், மேற்கு மலைத்தொடர் பகுதியில் குற்றாலம் அருவி அமைந்துள்ளது.
பொதுவாக விடுமுறை தினங்களில் குற்றால அருவியில் குளிக்க உள்ளூர் மற்றும்
வெளியூரில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது உண்டு.
இந்த நிலையில், கடந்த வாரங்களில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்த கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளுக்கு குற்றால அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக குற்றால அருவியின் நீர்வரத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். தற்போது மழை குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க இன்று முதல் வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இதன் காரணமாக கோவை குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.