ஜப்பான் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை -நீதிமன்றம் உத்தரவு
ஜப்பான் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி” படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கியுள்ள படம் ஜப்பான். மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். அவருடைய முந்தைய படங்கள் கமர்ஷியல் ரீதியிலான படங்களா இல்லாமல் இருந்தது. ஆனால், இந்தப் படத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தியுடன் கை கோர்த்திருக்கிறார்.
’ஜப்பான்’ படத்தின் டீசர், டிரைலர் ஆகியவற்றைப் பார்க்கும் போது கார்த்தி நடித்து வெளிவந்த ‘சிறுத்தை’ படம் போன்ற ஒரு கலகலப்பான படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்ற ஒரு தகவலும் இருக்கிறது.
கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் அவ்வப்போது மாறுபட்ட கதாபாத்திரங்களில், தோற்றங்களில் கார்த்தி நடிப்பது வழக்கம். அதை இந்தப் படத்தில் தொடர்ந்திருக்கிறார். “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஜப்பான்” ஆகிய இரண்டு படங்களுக்கு இடையில்தான் இந்த வருட தீபாவளிக்கான முதன்மைப் போட்டி. இரண்டில் எந்தப் படம் முந்தப் போகிறது என்பது நவம்பர் 10ம் தேதி தெரிந்துவிடும்.
இந்நிலையில், ஜப்பான் படத்தை சட்டவிரோதமாக 1,177 இணையதளங்கள் மற்றும் கேபிள் தொலைக்காட்சிகள் ஆகியவற்றில் வெளியிடப்படுவதைத் தடுக்க உத்தரவிடக்கோரி ட்ரீம் வாரியர் பிட்சர்ஸ் நிறுவனம் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, ஜப்பான் திரைப்படத்தைச் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.