விஷச் சாராய வழக்கில் கைதான 3 பேருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் - நீதிமன்றம் உத்தரவு!
விஷச் சாராய வழக்கில் கைதான 3 பேருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி சட்ட விரோதமாக விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். இதில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, 19-ம் தேதி இரவு 11 மணி நிலவரப்படி 17 பேர் உயிரிழந்தனர். நேற்று மாலை நிலவரப்படி, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி 49 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் விற்று 49 பேர் மரணத்திற்கு காரணமான முக்கிய குற்றவாளி சின்னதுரை கைது செய்யப்பட்டுள்ளார். கடலூரில் பதுங்கியிருந்த சின்னதுரையை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ், தாமோதரன் மற்றும் விஜயா ஆகிய மூவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், விஷச் சாராய வழக்கில் கைதான கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ், தாமோதரன் மற்றும் விஜயா ஆகியோர் கள்ளக்குறிச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் மூவரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.