Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி - அர்ஜென்டினா, கொலம்பியாவைத் தொடர்ந்து உருகுவே 3ஆம் இடம்!

12:45 PM Jul 14, 2024 IST | Web Editor
Advertisement

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில், அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், உருகுவே அணி 3ஆம் இடத்தை பிடித்துள்ளது. 

Advertisement

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. பெரும் எதிர்பார்ப்புடன் துவங்கி இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்ற நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா மற்றும் முன்னாள் சாம்பியன் கொலம்பியா அணிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

இந்த போட்டித் தொடரில் 30-வது முறையாக இறுதிப்போட்டியை எட்டியுள்ள அர்ஜென்டினா அணி 16-வது முறையாக கோப்பையை வெல்ல ஆவலாக உள்ளது. அதே நேரத்தில் 2001-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் கொலம்பியா 2-வது முறையாக கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் இருக்கிறது. எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. மியாமி ஹார்ட் ராக் அரங்கத்தில் இன்று இப்போட்டி நடைபெறுகிறது.

இதனிடையே அரையிறுதியில் தோல்வியை தழுவிய கனடா மற்றும் உருகுவே அணிகள் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் மோதின. பரபரப்பாக துவங்கிய இந்த போட்டியின் 8-வது நிமிடத்தில் உருகுவே தனது முதல் கோலை அடித்தது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

மறுபுறம் கனடா அணி போட்டியின் 22-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்தது. இதன் காரணமாக இரு அணிகளும் ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தன. இதைத் தொடர்ந்து இரு அணி வீரர்களும் அடுத்த கோல் அடிக்கும் முனைப்பில் தீவிரம் காட்டினர். எனினும், முதல் பாதியில் கனடா 1-1 உருகுவே அணிகள் சமநிலையில் இருந்தன.

இதைத் தொடர்ந்து 2-வது பாதியில் வெகு நேரம் ஆகியும் இரு அணி வீரர்கள் கோல் அடிக்க முடியாத அளவுக்கு போட்டி நெருக்கமாக இருந்தது. போட்டியின் 80-வது நிமிடத்தில் கனடா அணி தனது 2-வது கோலை அடித்து முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து 90-வது நிமிடத்தில் உருகுவே அணியும் தனது 2-வது கோலை அடித்ததால் போட்டி மீண்டும் சமனுக்கு வந்தது. இரு அணிகளும் சமநிலையில் இருந்ததால், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதிலும் இரு அணி வீரர்களால் வெற்றிக்கான கோல் அடிக்க முடியாமல் போனது.

இதன் காரணமாக பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டுவரப்பட்டது. இதில் 3-4 என்ற கணக்கில் உருகுவே வெற்றி பெற்று அசத்தியது. இதன் காரணமாக நடப்பு கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் உருகுவே மூன்றாவது இடம்பிடித்தது.

Tags :
argentinaCanadaColombiaCopa America 2024Uruguay
Advertisement
Next Article