"கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்போம்" - #chennai பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் கூட்டுக் குழு அறிவிப்பு!
கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்போம் என சென்னை பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் கூட்டுக் குழு அறிவித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் செயற்குழு கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. அந்த கூட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வருகிற 24-ந்தேதி நடைபெற இருக்கும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்து, உயர்கல்வித் துறைக்கு கோரிக்கை தீர்மானங்களை அனுப்பி வைத்து இருந்தது. கோரிக்கை தீர்மானங்களில் , 22 பேராசிரியர்களின் நியமனத்தை விசாரிப்பதற்கு விசாரணைக்குழு அமைக்க வேண்டும். பல்கலைக்கழகத்துக்கு உடனடியாக துணைவேந்தரை நியமிக்க வேண்டும்.
ஆசிரியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பதவி உயர்வு வழங்குவதில் காலம் தாழ்த்தாமல், பழைய நடைமுறையின்படி பதவி உயர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மாணவர்களின் கல்விக்கான அடிப்படை வசதிகளை செய்யவேண்டும். பல்கலைக்கழகத்துக்கான நிதி மானியத்தை உடனே அரசு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்டவைகள் அதில் இடம்பெற்றுள்ளன.
இதையும் படியுங்கள் : இன்று தொடங்குகிறது ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் #Mainsexam
பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக அறிவித்த சென்னை பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் அடுத்தகட்ட நடவடிக்கையாக சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (செப்டம்பர் - 20ம் தேதி) போராட்டம் நடத்தப்பட இருப்பதாகவும் அறிவித்து இருக்கிறது. சென்னை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டம் இன்று பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ள நிலையில், இந்த போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.