மிரட்டல் வழக்கில் பிடிபட்ட குற்றவாளி; விசாரணையில் கிடைத்த 2 வெடிகுண்டுகள்!
மிரட்டல் வழக்கில் பிடிபட்ட குற்றவாளியைக் கைது செய்து விசாரணை செய்ததில் 2 வெடிகுண்டுகள் குறித்த தகவல் கிடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் அடுத்த காட்பாடி பகுதியை பூர்விகமாகக் கொண்டவர் கார்த்திக். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு கடத்தல் வழக்கில் ஒன்றில் சிக்கி சிறைக்கு சென்ற பிறகு அந்தப் பகுதியில் வாழ்வதற்கு அச்சம் ஏற்பட்டு பயத்தின் காரணமாக சென்னை நோக்கி வந்துள்ளார்.
அப்பொழுது பெரம்பூரில் பெண் ஒருவரை பார்த்து காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு சென்னை வில்லிவாக்கத்தில் கல்லு கடை பேருந்து நிலையம் அருகில் வீடு ஒன்றை வாடகை எடுத்து தங்கி வந்துள்ளார். இந்த நிலையில் இவர் போதைக்கு அடிமையாகி கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று சென்னை வில்லிவாக்கத்தில் பெட்டிக்கடை ஒன்றில் சிகரெட் வாங்க சென்றுள்ளார். அப்பொழுது சிகரெட் வாங்கிவிட்டு பணம் தராமல் கத்தியை வைத்து கடை உரிமையாளரை மிரட்டி உள்ளார். இந்நிலையில் கடை உரிமையாளர் புகார் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வில்லிவாக்கம் போலீசார் கார்த்திகை கைது செய்து விசாரணை மேற்கொள்ளும் பொழுது போலீசாரிடம் எனது வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளேன் என மிரட்டியுள்ளார்.
அப்பொழுது கார்த்தியின் வீட்டிற்குச் சென்ற வில்லிவாக்கம் போலீசார் அவரது வீட்டில் சோதனை செய்யும் பொழுது இரண்டு வெடிகுண்டுகள் வைத்திருப்பதைக் கண்டுபிடித்தனர். பின்னர் காவல் நிலை கொண்டு சென்று விசாரணை மேற்கொள்ளும் பொழுது அவர் மீது காட்பாடியில் கடத்தல் வழக்குகள் கொலை மிரட்டல் வழக்குகள் என பல்வேறு வழக்குகள் நினைவில் இருப்பது தெரியவந்தன.
மேலும் 2021 ஆம் ஆண்டு பல்லாவரத்தில் ஒரு கடத்தல் வழக்கில் சிக்கி சிறைக்கு சென்று வெளியே வந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.