இந்திய தேசியக்கொடி தொடர்பான சர்ச்சை... மன்னிப்புக் கோரினார் மாலத்தீவு முன்னாள் அமைச்சர் மரியம் ஷியுனா!
“இந்தியாவையோ, அந்நாட்டின் தேசியக் கொடியையோ அவமதிக்கும் வகையில் நான் எதும் பேசவில்லை" என மாலத்தீவில் முன்னாள் அமைச்சர் மரியம் ஷியுனா மன்னிப்பு கோரியுள்ளார்.
பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததற்காக இந்த ஆண்டு தொடக்கத்தில் மாலத்தீவு அமைச்சர்களுள் ஒருவராக இருந்த மரியம் ஷியூனா அப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். சமீபத்திய இவரின் எக்ஸ் தள பதிவு ஒன்று இந்திய தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் அதற்கு மன்னிப்பு கோரியுள்ளார். அந்த பதிவையும் தனது எக்ஸ் தள பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார்.
கவனத்தையும், விமர்சனத்தையும் பெற்ற என்னுடைய சமீபத்திய சமூக ஊடகப் பதிவு பற்றி தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனது சமீபத்திய இடுகையின் உள்ளடக்கத்தால் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டிருந்தால் அதற்கு எனது மனப்பூர்வமான மன்னிப்பைக் கோருகிறேன்.
மாலத்தீவின் எதிர்க்கட்சியான எம்.டி.பி.க்கு நான் அளித்த பதிலில் பயன்படுத்தப்பட்ட படம் இந்தியக் கொடியை ஒத்திருந்தது என் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இது முற்றிலும் தற்செயலானது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இது ஏதேனும் தவறான புரிதலை ஏற்படுத்தியிருந்தால், அதற்காக நான் வருந்துகிறேன். இந்தியாவுடனான உடனான உறவை மாலத்தீவு ஆழமாக மதிக்கிறது. எதிர்காலத்தில் நான் பகிரும் உள்ளடக்கத்தை சரிபார்ப்பதில் அதிக விழிப்புணர்வுடன் இருப்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.
மாலத்தீவில் ஏப்ரல் 21 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சியை விமர்சிக்கும் வகையில், “எம்டிபி மிகப்பெரிய சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மாலத்தீவு மக்கள் அவர்களுடன் விழ விரும்பவில்லை” எனக் குறிப்பிட்டு ஒரு படத்தை பகிர்ந்திருந்தார். அதில் கட்சியின் படத்திற்கு பதில், அசோக சக்கரம் போன்ற படம் இருந்தது. இந்நிலையில் இந்த பதிவிற்கு இந்தியர்கள் பலர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.