“அமரன் படத்தில் "பஜ்ரங் பாலி கி ஜெய்" என முழக்கமிட்டது தொடர்பான சர்ச்சை” -விளக்கம் அளித்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி!
அமரன் படத்தில் ராணுவ வீரர்கள் ‘பஜ்ரங் பாலி கி ஜெய்’ என முழக்கமிடுவது சர்ச்சையான நிலையில், இது ராஜ்கோட் ரெஜிமென்ட்டின் பிரத்யேக முழக்கம் எனவும், அதை மாற்றி படம் எடுக்க முடியாது எனவும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் அமரன் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, இந்த திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, “இது பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் மற்றும் பாராட்டைப் பெற்று வெளிவந்த திரைப்படம். இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அவர்கள் கூறும் தகவல் சரிதானா என்பதை சரிபார்த்து பேச வேண்டும்.
‘துர்கா மாதா கீ ஜெய்’, ‘ஜெய் பஜ்ரங் பாலி’ என ஒவ்வொரு இராணுவ படைப்பிரிவுக்கும் ஒவ்வொரு முழக்கம் இருக்கிறது. ராஜ்புத் 44RR இராணுவ படைப்பிரிவின் முழக்கம் ‘ஜெய் பஜ்ரங் பாலி’ என்பதாகும். அதை நான் வேறுமாதிரி மாற்றி எடுக்க முடியாது. மாற்றி எடுத்தால் தான் தவறாகும்.
எனக்கும் பல அரசியல் கருத்துக்கள் இருக்கும். ஆனால் என்னுடைய அரசியல் பார்வையையும், சொந்த கருத்தையும் இந்த படத்தில் திணிக்க முடியாது. ஒரு இயக்குநராக என்னுடைய கருத்துக்கள் இந்த படத்தில் வரக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். எனக்கும் சமூக பொறுப்பு இருக்கிறது” எனத் தெரிவித்தார்.