மக்களவையில் இந்தி பேசும் மாநிலங்கள் குறித்து சர்ச்சை பேச்சு | வருத்தம் தெரிவித்த திமுக எம்பி செந்தில்குமார்!
இந்தி பேசும் மாநிலங்கள் குறித்த தனது கருத்துக்கு நாடாளுமன்ற மக்களவையில், கடும் எதிர்ப்பு எழுந்ததால் வருத்தம் தெரிவித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், தனது கருத்துக்களை திரும்ப பெற்றுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றம் தொடங்கிய உடனேயே இந்தி பேசும் மாநிலங்கள் குறித்து திமுக உறுப்பினர் செந்தில்குமார் தெரிவித்த கருத்துக்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.
நாட்டில் பிரிவினை ஏற்படுத்தும் வகையில் பேசிய செந்தில்குமார் தனது கருத்துக்களுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அவையில் சிறிதுநேரம் அமளி ஏற்பட்டதை தொடர்ந்து நண்பகல் 12 மணி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, தன்னுடைய கருத்து மற்றவர்களுடைய உணர்வுகளை காயப்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் தன்னுடைய கருத்துகளை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும் செந்தில்குமார் தெரிவித்தார்.
முன்னதாக நாடாளுமன்ற திமுக தலைவர் டி.ஆர். பாலு, அவருடைய கருத்துக்களுக்கு மன்னிப்பு தெரிவித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.