தொடர் மழை - நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்திற்கு கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. தொடர் கனமழையால் பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்த நிலையில் மண் சரிவும் ஏற்பட்டது.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்துக்கு இன்று கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கூடலூர், பந்தலூர், குந்தா தாலுகா பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார். மேலும் , கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்து வரும் கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவிற்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.