கேரளாவில் தொடர் மழை - பாலக்காடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக, வட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் தொடர் மலையின் காரணமாக கண்ணூர், காசர்கோடு, வயநாடு மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், எர்ணாகுளம், இடுக்கி திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கேரளாவில் மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் கேரள, லச்ச தீவு பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மலையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மழையின் காரணமாக கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.