பெங்களூருவில் தொடர் மழை - 23 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க இன்னும் 15 நாட்கள் உள்ள நிலையில் பெரும்பாலான பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக பெங்களூருவின் பெரும்பாலான பகுதிகளில் மழையால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. மேலும் கனமழையால் சாலையில் பெருக்கெடுத்த வெள்ளநீரும், சாக்கடை கழிவு நீரும் கலந்து குடியிருப்பு பகுதிகளில் தேங்கியது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியாத, பைக், கார்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டடுள்ளது.
இந்த நிலையில், பெங்களூருவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பெங்களூரு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
"தென்கிழக்கு வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த வானிலை நிலவுகிறது. இதன் காரணமாக தென்மாநிலங்களில் மழை தீவிரம் அடையும். பெங்களூரு உள்பட 23 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும். சில நேரங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இந்த வாரம் முழுவதும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
பெங்களூரு புறநகர், கோலார், சிக்பள்ளாப்பூர், துமகூரு, மண்டியா, மைசூரு, ஹாசன், குடகு, பெலகாவி, பீதர், ராய்ச்சூர், யாதகிரி, தாவணகெரே, சித்ரதுர்கா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.