தொடரும் ‘டீப்ஃபேக்’ வீடியோ - யாரும் நம்ப வேண்டாம் என ரத்தன் டாடா பதிவு...
மூத்த தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, தனது பெயரில் சமூக ஊடகங்களில் தவறாக சித்தரிக்கப்பட்ட வீடியோ போலியானது என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றன. இந்நிலையில், அவற்றைப் பயன்படுத்தி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரின் போலி புகைப்படங்கள், வீடியோக்களை உருவாக்கும் செயல்களும் அதிகரித்துள்ளன. செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் இத்தகைய போலி உருவாக்கங்கள் ‘டீப்ஃபேக்’ என்று அழைக்கப்படுகிறது.
சமீபத்தில், ‘டீப்ஃபேக்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடிகை ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைஃப், கஜோல் ஆகியோரின் முகங்களை வேறு சிலரின் முகங்களோடு பொருத்தி வெளியிடப்பட்ட டீப்ஃபேக் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி பெண்களோடு சேர்ந்து கார்பா நடனம் ஆடுவதாக சமீபத்தில் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இதையடுத்து அவர் "நான் கார்பா நடனம் ஆடியது போன்ற ஒரு வீடியோவை சமீபத்தில் பார்த்தேன். இதுபோன்ற போலி வீடியோக்கள் மிகவும் கவலை அளிக்கின்றன” என்றார்.
இதனைத் தொடர்ந்து, இதுபோன்ற போலி வீடியோக்களை தயாரித்து வெளியிடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எச்சரித்தார்.
இந்நிலையில், டாடா குழும முன்னாள் தலைவர் ரத்தன் டாடா குறிப்பிட்ட நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு பேசிய வீடியோவைப் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து, சமூக வலைத்தளத்தில் போலியாகச் சுற்றி வரும் ஒரு முதலீட்டு மோசடி வலை குறித்த பதிவில் தன்னுடைய பெயர் மற்றும் புகைப்படம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இதை யாரும் நம்ப வேண்டாம் எனவும், ரத்தன் டாடா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.