விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கண்டெய்னர் கப்பல் நடுகடலில் சாய்ந்து விபத்து - மீட்பு பணிகள் தீவிரம்!
விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட லைபீரியா கொடியுடன் கூடிய MSC ELSA 3 கண்டெய்னர் கப்பல் நடுகடலில் சாய்ந்து விபத்துக்குள்ளானது. நேற்று(மே.23) புறப்பட்ட இந்த கண்டெய்னர் கப்பல், இன்று(மே.24) கொச்சி வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விபத்து ஏற்பட்டுள்ளது.
184 மீட்டர் நீளமுள்ள இந்தக் கப்பல் சரியாக இன்று மதியம் 1.25 மணியளவில் கொச்சியிலிருந்து தென்மேற்கு பகுதியில் சுமார் 38 நாட்டிக்கல் மைல் தூரத்தில், 26 டிகிரி சாய்ந்து விபத்து ஏற்பட்டதாக MSC ELSA 3 கப்பலில் உள்ள மாலுமிகளிடம் இருந்து இந்திய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த இந்திய கடலோர காவல்படை மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கப்பலில் இருந்த 24 பணியாளர்களில் 09 பேர் கப்பலை கைவிட்டு உயிர்காக்கும் படகுகளில் உள்ளனர். மீதமுள்ள 15 பேருக்கான மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
மேலும் விபத்தில் சிக்கி இருப்பவர்களை வெளியேற்ற ஐசிஜி விமானங்கள் கப்பலின் அருகே கூடுதல் உயிர்காக்கும் படகுகளை இறக்கியுள்ளன. தொடர்ந்து உயிரிழப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதத்தைத் தடுக்க, இந்திய கடலோர காவல்படையினரால் சாய்ந்துள்ள கண்டெய்னர் கப்பல் கண்காணிகப்பட்டு வருகிறது. விபத்து குறித்த அறிவிப்புகள் இன்னும் சொல்லப்படைல்லை.