Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டிற்கான தண்டனையே.." - தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு குறித்து விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
09:57 AM Mar 05, 2025 IST | Web Editor
Advertisement

கடந்த 50 ஆண்டுகளாகக் கல்வி, சுகாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டில் முதலீடு செய்து, தனது மக்கள்தொகை வளர்ச்சியைத் திறம்படக் கட்டுப்படுத்தியுள்ள தமிழ்நாடு மற்றும் இதர தென்மாநிலங்களுக்கு இது ஒரு பெரும் தண்டனையே அன்றி வேறு இல்லை என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

Advertisement

"நம் அரசியல் சாசனத்தின் 84ஆவது சட்டத் திருத்தத்தின்படி நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு 2026ஆம் ஆண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் ஆண்டிற்கு பிறகு இந்த மறுசீரமைப்புப் பணி, மத்திய அரசால் தொடங்கப்பட வாய்ப்புள்ளது. எவ்வகையில் இந்த மறுசீரமைப்பு நடைபெறும் என்பது பற்றி எந்த ஒரு தெளிவான விளக்கமோ வாக்குறுதியோ மாநிலங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை.

தற்போதைய நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமலோ அல்லது இன்னொரு அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தியோ இந்த மறுசீரமைப்பு நடைபெறலாம். எந்த முறையைப் பின்பற்றினாலும் அதில் "மாநிலங்களின் மக்கள் தொகை" என்பது ஒற்றை அளவுகோலாக இல்லாவிடினும் முக்கிய அளவுகோலாக இருக்கும் என்பது பட்டவர்த்தனமான உண்மை.

நம் அரசியல் சாசன 81ஆவது சட்டப் பிரிவு, நாட்டிலுள்ள ஒவ்வொரு மக்களவை உறுப்பினரும் கூடுமானவரையில் "சம-எண்ணிக்கையிலான மக்களுக்குப் பிரதிநிதியாக இருக்க வேண்டும்" என்று கூறுகிறது. இதற்கு அடிப்படையான One vote-one value" என்பது ஒரு ஜனநாயகக் கோட்பாடு. ஆனால் அதே சமயம் இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட கூட்டாட்சி நாட்டில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் சமமான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதும் ஒரு முக்கியமான ஜனநாயகக் கோட்பாடாகும்.

இந்த இரு கோட்பாடுகளையும் முடிந்தவரையில் ஒன்று மற்றொன்றை அதிகம் பாதிக்காத வகையில் நடைமுறைப்படுத்த முயல வேண்டும். புதிதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் மட்டுமோ அல்லது புதிய மக்கள் தொகையை ஒரு முக்கிய அளவுகோலாகக் கொண்டோ நிகழ்த்தப்படும் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறையும் ஆபத்து உள்ளது.

கடந்த 50 ஆண்டுகளாகக் கல்வி, சுகாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டில் முதலீடு செய்து, தனது மக்கள்தொகை வளர்ச்சியைத் திறம்படக் கட்டுப்படுத்தியுள்ள தமிழ்நாடு மற்றும் இதர தென்மாநிலங்களுக்கு இது ஒரு பெரும் தண்டனையே அன்றி வேறு இல்லை. ஏற்கெனவே ஒரு மாநிலத்தில் இருந்து மட்டும் 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால், அது மற்ற மாநிலங்களை விடக் கூடுதல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது.

இந்த வேறுபாடு மேலும் அதிகரிக்கக் கூடாது. தென் மாநிலங்களுக்கு ஒப்பீட்டளவில் தொகுதிகள் மேலும் குறைக்கப்பட்டாலோ அல்லது உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களுக்கு ஒப்பீட்டளவில் கூடுதலாகத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலோ அது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். இந்நிலையில் புதிய நாளாளுமன்றக் கட்டடத்தின் மக்களவையில் 888 இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதைப் பார்த்தால், மத்திய அரசு நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் நீண்டகாலத் திட்டத்தில் இருந்ததாகவே தெரிகிறது.

அப்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, ஒருவேளை தென் மாநிலங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தற்போதுள்ள விகிதாச்சார அடிப்படையிலேயே தொகுதிகளைப் பிரித்துக் கொடுத்தாலும் அதுவும் ஓர் உகந்த முன்னெடுப்பாக அமையாது. ஏனென்றால்,

  1. தற்போது 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும்பொழுதே அனைத்து உறுப்பினர்களுக்கும் கேள்வி நேரங்களில் கேள்வி கேட்க அனுமதி கிடைப்பதில்லை; Ballor முறையிலேயே கேள்வி கேட்கத் தேர்ந்தெடுக்கப்பட்டு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அப்படியே வாய்ப்பு வழங்கப்பட்டாலும் பெரும்பாலும் சில நிமிடங்களுக்கு மேல் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் மேலும் உறுப்பினர்களைச் சேர்த்துக்கொண்டு அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் வெறும் அலங்கார பொம்மைகளாக இருப்பதில் என்ன பலன்?
  2. மக்களின் இன்றைய அடிப்படைப் பிரச்சனைகள். விலைவாசி உயர்வு, வேலையின்மை. தரமான கல்வி மற்றும் சுகாதார வசதியின்மை, சாலை மற்றும் குடிநீர் வசதியின்மை போன்றவை தான். நாடாளுமன்ற / சட்டமன்ற உறுப்பினர்களின் பற்றாக்குறை" என்பது ஒரு மக்கள் பிரச்னையே இல்லை. மிக முக்கியமான ஜனநாயகம் சார்ந்த பல பிரச்னைகள் நாட்டில் இருப்பதை நான் கீழே விவரித்து இருக்கிறேன். அவற்றைக் களைவதுதான் நம் முதன்மைப் பணியாக இருக்க வேண்டும்.
  3. நாடாளுமன்றத்தின் முதன்மை நோக்கங்கள், போதிய விவாதங்களுக்குப் பிறகு சட்டங்கள் இயற்றுவது மற்றும் ஆளும் அரசைக் கேள்வி கேட்டு, அது நேர்மையாக மற்றும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு ஆட்சி செய்கிறதா என்பதைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துவது ஆகும். ஆனால் தற்பொழுது இந்த முக்கிய ஜனநாயகப் பணியை நாடாளுமன்றம் செய்யத் தவறி வருகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

நமது நாடாளுமன்ற முறை பிரிட்டிஷ் முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அங்கு உள்ளது போன்று 'பிரதமர் கேள்வி நேரம்" போன்ற எந்த ஒரு சாதனத்தையும் நம் நாடாளுமன்றம் வகுக்கவில்லை. நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளில் சீர்திருத்தம் கொண்டு வராமல் நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிகரிப்பதன் மூலம் மட்டும் எந்த ஒரு பலனும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் ஊழல் மலிந்த இன்றைய அரசியல் சூழலில், அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் மேல் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை குறைவானதாகவே உள்ளது என்பதுதான் இன்றைய யதார்த்த நிலை.

மேலும் ஏற்கெனவே பல லட்சம் கோடி கடன் இருக்கும் நிலையில், கூடுதலாக வரும் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சம்பளம், குடியிருப்பு மற்றும் இதர வசதிகளுக்குச் செலவிடப்படும் மக்கள் வரிப்பணம் அவசியம் தானா? இன்றைய Digital மற்றும் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மக்களிடம் இன்னும் திறம்படத் தொடர்பில் இருப்பதே சாலச் சிறந்த அணுகுமுறையாக அமையும், ஜனநாயகத்தைக் காக்க எந்த ஒரு செலவும் பெரிய செலவு அல்ல என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இருப்பினும் அந்தச் செலவுகள் அவசியமானதாக இருக்க வேண்டும்.

எனவே மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு நம் அரசியல் சாசனத்தின் பிரிவுகளைத் தக்கவாறு திருத்தி அமைத்து, ஒவ்வொரு மாநிலத்திற்கும் 1971 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தற்பொழுது ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் இன்றி அது காலவரையின்றி நீட்டிப்பு செய்யப்பட வேண்டும். அமெரிக்காவில் மக்களவைப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 435 என நிரந்தரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

'Equal population representation from each MP' என்ற கோட்பாடு அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு 50 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இனியும் நீடித்தால் எந்த ஒரு பெரிய தீமையும் நிகழ்ந்துவிடப் போவதில்லை; இதுதான் இந்தியாவின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் முக்கியக் காரணம் என்பதும் இல்லை. ஜனநாயகக் கோட்பாடுகளை உளமாரக் காக்க விரும்பினால், மத்திய அரசு கீழ்க்கண்டவற்றைத் தான் செய்ய வேண்டும்.

காலக்கட்டத்தின் தேவையாக உணரப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அப்போது பல இடங்களில் பிரிவினைவாதப் போக்குகள் நிலவின என்பதை நாம் மறுக்க முடியாது, ஆனால் விடுதலை பெற்று 75 ஆண்டுகள் கடந்துவிட்ட சூழ்நிலையில் இந்தியத் திருநாடு தற்போது ஒரு முதிர்ச்சி அடைந்த மற்றும் நிலையான ஜனநாயகமாகப் பரிணமித்து விளங்குகிறது.  குழந்தைகள் பெரியவர்களாக வளரும் வரையில்தான் பெற்றோர்களின் மேற்பார்வையும் கட்டுப்பாடுகளும் அவசியம்.

ஓரளவுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளுக்கு, தேவையான சுதந்திரம் கொடுத்தால்தான் குடும்பம் ஒற்றுமையாக நிலைத்திருக்கும். அதேபோல் இன்றைய சூழ்நிலையில் மாநிலங்களுக்கு சுயாட்சியும், உரிய நிதிப் பகிர்வு மற்றும் நிதிச் சுதந்திரமும் வழங்குவதே இந்தியா என்ற கூட்டுக் குடும்பத்தை இன்னும் ஒற்றுமையானதாக நிலைத்திருக்கச் செய்யும் ஜனநாயக வழியாகும்.

ஒரு கூட்டாட்சி அரசியலில் மக்களவையில் மக்கள் தொகை அடிப்படையில் பிரதிநிதித்துவமும், மாநிலங்களவையில் அனைத்து மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவமும் வழங்குவதே சரியான முறையாகும். அமெரிக்கா போன்ற முன்னுதாரணமான கூட்டாட்சி நாட்டில் அவ்வாறே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நம் நாட்டில் மக்களவையிலும் மக்கள் தொகை அடிப்படையில் பிரதிநிதித்துவம், மாநிலங்களவையிலும் மக்கள் தொகை அடிப்படையில் பிரதிநிதித்துவம் என்பது அடிப்படைக் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.

அதே வேளையில் மற்ற நாடுகளுடன் முழுவதுமாக நம்மை ஒப்பிட முடியாது என்பதும் உண்மை. எனவே மாநிலங்களவையில் கூடுமானவரையில் அனைத்து மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் வழங்குவது குறித்துப் பொது விவாதம் நடத்தப்பட வேண்டும்: அரசியல் சாசன வல்லுனர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் மாநிலங்களவையில் உரிய சீர்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.

இவற்றையெல்லாம் விடுத்து "equal population representation from each MP என்ற போர்வையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் மறு சீரமைப்பை மத்திய அரசு தன்னிச்சையாக முன்னெடுக்குமானால், அது தென் மாநிலங்களின் அரசியல் முக்கியத்துவத்தை முற்றிலும் அழிப்பதற்கான முயற்சியாகவே பார்க்கப்படும். ஒரு சில வட மாநிலங்களில் மட்டும் வெற்றி பெற்று, ஒன்றியத்தில் ஆட்சி அமைத்து விடலாம் என்ற சூழ்நிலை உருவானால் அது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

இந்த மிக முக்கியமான தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தோளோடு தோள் நின்று இணைந்து போராடும்: மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் ஒவ்வொருவரும் தங்கள் இறுதி மூச்சு உள்ளவரை தமிழ்நாட்டின் நலனைக் காப்போம் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். தீமையிலும் ஒரு நன்மை என்பது போல் இந்தத் தலையாய பிரச்னையில் தமிழ்நாட்டின் நலனுக்காக யார் இருக்கிறார்கள்: தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக யார் இருக்கிறார்கள் என்பதை அடையாளப்படுத்த இது உதவட்டும்.

அண்ணல் அம்பேத்கர் வழங்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை விழுமியங்களில் ஒன்று Federalism எனப்படுகிற "கூட்டாட்சித் தத்துவ முறை". ஆதலால் மத்திய அரசு அனைத்து மாநிலங்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே இந்த மறுசீரமைப்பு பற்றிய முடிவை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது. இதுவே நம் அரசியல் சாசனத் தந்தை அண்ணல் அம்பேத்கருக்கு நாம் செய்யும் உரிய மரியாதை ஆகும்"

இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

Tags :
தமிழக வெற்றிக் கழகம்தவெகவிஜய்news7 tamilNews7 Tamil UpdatesTamilaga Vettri KazhagamtvkTVK Vijayvijay
Advertisement
Next Article