ராமர் கோயில் பிரதிஷ்டை - அயோத்தியில் கிடுகிடுவென் உயரும் காலிமனைகளின் விலை.!
ராமர் கோயில் பிரதிஷ்டையை முன்னிட்டு அயோத்தியில் காலிமனைகளின் விலை கிடுகிடுவென் உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வரும் ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வருகிற 22-ஆம் தேதி மதியம் 12.20 மணியளவில் தொடங்கும் பிரதிஷ்டை நிகழ்வு, 1 மணி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உபி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயில் அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் உள்ளிட்டோர் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள ராமர் சிலை கருவறைக்குள் இன்று காலை கொண்டு செல்லப்பட்டது. கிரேன் இயந்திரம் மூலம் ராமர் சிலை கருவறைக்குள் வைக்கப்படுவதற்கு முன்னதாக சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது.
அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டையை முன்னிட்டு கோயிலுக்கு தினமும் வருகை தருவோரின் எண்ணிக்கையை 80 ஆயிரம் முதல் 1லட்சம் வரை வருகை தரக்கூடும் என எதிர்பார்த்துள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் உபி அரசு தெரிவித்துள்ளது.
அயோத்தி நகரம் பொருளாதார மையமாக மட்டுமின்றி, கலாச்சார மையமாகவும் மாறப்போக உள்ளதாக உபி அரசு அறிவித்துள்ள நிலையில் அங்குள்ள காலி மனைகள் மற்றும் கட்டடங்களின் மதிப்புகள் அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அயோத்தியில் 14.5கோடிக்கு இடம் வாங்கிய செய்தி வெளியாகின. இதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட காலி மனைகள் 10 முதல் 20 மடங்கு விலையேற வாய்ப்புள்ளது.