“படியில் நிற்காதே” எனக்கூறிய நடத்துநருக்கு கத்திக்குத்து... #Bengaluru-ல் பரபரப்பு!
பெங்களூருவில் படிக்கட்டில் நிற்க வேண்டாம் எனக்கூறிய நடத்துநரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் படிக்கட்டில் நின்று பயணம் செய்ய வேண்டாம் எனக்கூறிய நடத்துநருக்கு, கத்திக்குத்து நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பெங்களூரு பெருநகர போக்குவரத்துக் கழகத்திற்கு (பிஎம்டிசி) சொந்தமான பேருந்து ஒயிட்ஃபீல்ட் காவல் நிலையம் அருகே சென்றுள்ளது.
அப்போது பயணி ஒருவர் படிக்கட்டில் நின்றுகொண்டே பயணம் செய்துள்ளார். அதனை பார்த்த பேருந்து நடத்துநர் படிக்கட்டில் நிற்க வேண்டாம் எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பயணி, நடத்துநரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த நடத்துநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து குற்றவாளியை பயணிகள் அடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்ஷ் சின்ஹா என தெரியவந்துள்ளது. பெங்களூரில் உள்ள கால் சென்டர் ஒன்றில் பணியாற்றி வந்த இவர், கடந்த செப்.20ஆம் தேதி பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.