காஸா மீதான தாக்குதலுக்கு கண்டனம் - பதவியை ராஜிநாமா செய்தார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய இயக்குநர்!
காசாவில் இன அழிப்பு நடப்பதாகவும் அதனைத் தடுக்க ஐ.நா. தவறிவிட்டதாகவும் கூறி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் இயக்குநர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கி 26 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் நேற்று காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியன. கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்ட ஹமாஸ் மத்தியப் பிரிவு கமாண்டர் இப்ரஹிம் பியாரியுடன் சேர்த்து நிறைய ஹமாஸ் அமைப்பினர் வீழ்த்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை உறுதி செய்துள்ளது.
ஆனால் இப்ரஹிம் பியாரி வீழ்த்தப்படவில்லை என்று ஹமாஸ் கூறுகிறது. ”இஸ்ரேல் போலித் தகவலைத் தெரிவிக்கின்றது. ஹமாஸ் அழிப்புப் போர்வையில் இஸ்ரேல் அப்பாவி பொதுமக்களை வீழ்த்துகிறது” என்று ஹமாஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுவரை இஸ்ரேல் - ஹமாஸ் போரில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9800-ஐ நெருங்கியுள்ள நிலையில் ஹமாஸ் வெளிநாட்டு பிணைக் கைதிகளில் மேலும் சிலரை விடுவிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.