அநாகரிகமாக நடந்த இசையமைப்பாளருக்கு வலுக்கும் கண்டனம் - அமைதியாய் கடந்த ஆஃசிப் அலிக்கு குவியும் பாராட்டு!
மலையாள நடிகர் ஆசிஃப் அலியிடம் அநாகரிமாக நடந்து கொண்ட இசையமைப்பாளர் ரமேஷ் நாரயணுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அந்த தருணத்தை அமைதியாக புன்சிரிப்புடன் கடந்த ஆசிஃப் அலியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
மலையாளத்தில் மிகவும் பிரபலமாக அறியப்பட்ட எழுத்தாளரும், திரைக்கதை ஆசியருமான எம்.டி. வாசுதேவன் நாயரின் சிறந்த சிறுகதைகளை அடிப்படையாக கொண்டு "மனோரதங்கள்" என்கிற ஆந்தாலஜியை திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். 9 கதைகள் கொண்ட அந்த ஆந்தாலஜி படத்தை 8 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர்.
மனோரதங்கள் ஆந்தாலஜி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் அனைவரும் பிசியாக இருக்க பிரபல மலையாள இசையமைப்பாளரான ரமேஷ் நாராயண் நடந்து கொண்ட விதத்திற்காக அவரை இணையவாசிகள் திட்டித் தீர்த்து வருகின்றனர். அப்படி என்ன செய்தார் ரமேஷ் நாராயணன்?
இந்த நிலையில் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவின் ஒருபகுதியாக படத்தில் பங்களித்த இசையமைப்பாளர் ரமேஷ் நாராயணுக்கு விருது வழங்கப்பட்டது. மேலும் விருதை மலையாள நடிகர் ஆசிஃப் அலி பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த, ரமேஷ் நாராயணுக்கு நடந்து வந்து கொடுத்தார். அப்போது ரமேஷ் நாராயண் அந்த விருதை வாங்காமல் அவரிடமிருந்து பிடுங்கி படத்தின் இயக்குநரான ஜெயராஜை கொடுக்கச் சொன்னார். மிகவும் சங்கடத்திற்கு உள்ளான ஆசிஃப் அலி அமைதியாக சிரித்துக் கொண்டே அந்த நேரத்தை சமாளித்து அமைதியாக கிளம்பினார்.
இணையத்தில் வீடியோ வைரலானதை தொடர்ந்து இசையமைப்பாளர் ரமேஷ் நாராயண் ” ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வின்போது என்னை மேடைக்கு அழைக்காதது வருத்தமளித்தது. ஆசிஃப் அலிதான் எனக்கு விருது கொடுக்க வருகிறார் என்பது எனக்குத் தெரியாது. எனக்கு வயதாகிவிட்டது. யாரையும் அவமதிக்கவோ, பாகுபாடு காட்ட வேண்டும் என்றோ நான் எப்போதும் நினைத்ததில்லை. தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் அதற்கு வருந்துகிறேன். ஆசிஃப் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர். நான் தவறு செய்திருக்கும் பட்சத்தில் ஆசிஃப்-பை நேரில் அழைத்து மன்னிப்பு கேட்கவும் தயாராக உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.