கேரளா உயர்நீதிமன்றத்தில் #HemaCommittee-யின் 233 பக்கங்கள் கொண்ட முழுமையான அறிக்கை தாக்கல்!
ஹேமா கமிட்டியின் 233 பக்கங்கள் கொண்ட முழுமையான அறிக்கை, சீலிடப்பட்ட கவரில் கேரளா உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
சமீபத்தில் கேரளாவில் வெளியான நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள திரையுலகையே உலுக்கியுள்ளது. இந்த அறிக்கை வெளியானதை தொடர்ந்து, பல நடிகைகள் பல வருடங்களுக்கு முன்பு அவர்களுக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியான தொந்தரவுகள் குறித்து வெளிப்படையாக கூறி பிரபல நடிகர், இயக்குனர்கள் மீது குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஹேமா கமிட்டியின் 233 பக்கங்கள் கொண்ட முழுமையான அறிக்கை சீலிடப்பட்ட கவரில் வைத்து கேரள உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஏற்கனவே சுமார் 170 பக்கங்கள் கொண்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது முழு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் அறிக்கையின் முழு வடிவத்தையும், சிறப்பு புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், விசாரணை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்திக்கக் கூடாது எனவும் கேரள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.