எண்ணூர் அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு - தமிழ்நாடு அரசு முடிவு
எண்ணூர் அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக சுற்றுச் சூழல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்தடிசம்பர் 26-ம் தேதி இரவு சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் கடலுக்கும் கோரமண்டல் தொழிற்சாலைக்கும் இடையேயான குழாய் வழியாக கடல் பகுதியில் அமோனியம் வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் பெரியகுப்பம், சின்ன குப்பம், தாளங்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல், கண்ணெரிச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு கோரமண்டல் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, சுமார் இரண்டு கிராமத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலை இரண்டு நுழைவாயிலில் முன்பு தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூடுவதற்கு தொழிற்சாலையின் நுழைவாயிலில் அறிக்கையை ஒட்டிய நிலையில் தொழிற்சாலை முன்பாக போராடிய மக்கள கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் அம்மோனாயா கசிவு தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட தொழில்நுட்ப குழு ஒரு சில நாட்களில் தமிழக அரசிடம் அறிக்கையை சமர்பிக்க உள்ளது. அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அம்மோனியா கசிவு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சரின் தனிச் செயலாளர் தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் சுற்றுச் சுழல் துறை கூடுதல் தலைமை செயலாளர், மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதன் படி எண்ணூர் அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக சுற்றுச் சூழல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இழப்பீடு தொகை தொடர்பாக ஒருசில நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.