“இதுவரை நடித்த படங்களை தங்கலானுடன் ஒப்பிட்டால், அதெல்லாம் 3% கூட கிடையாது!” - நடிகர் விக்ரம்
“இதுவரை நான் மிகவும் கஷ்டப்பட்டு நடித்த படங்கள் என்றால் பிதாமகன், ராவணன், ஐ படங்களை சொல்லலாம். ஆனால், தங்கலானுடன் ஒப்பிட்டால், அதெல்லாம் 3% கூட கிடையாது!” என நடிகர் விக்ரம் கூறியுள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இணைந்த திரைப்படம் ‘தங்கலான். பா.ரஞ்சித்தின் தனது ‘நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு பிறகு இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் நடிகை பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று தங்கலான் திரைப்படத்தின் டீசரைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். விக்ரமின் தோற்றமும் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“வரலாறு, சரித்திரம் ஆகியவற்றில் உள்ள நல்ல விஷயங்களை நாம் கொண்டாட வேண்டும் என்று என் அப்பா கூறுவார். அதனை ரஞ்சித் இந்த திரைப்படத்தில் சிறப்பாக காட்சிப்படுத்தி உள்ளார். இந்த திரைப்படத்தில் உள்ள அனைத்து காட்சிகளும் மிக அற்புதமாக இருக்கும். இந்த படத்தில் டப்பிங் இல்லாமல் லைவ் சவுண்ட்-ல் எடுக்க பட்டதால் மிகவும் கஷ்டமாக இருந்தது. ஒவ்வொரு வார்த்தையின் உச்சரிப்பும் மிக சரியாக இருக்க வேண்டும்.
படம் எடுக்கப்பட்ட KGF இடம் மிகவும் மோசமானதாக இருந்தது. பகலில் கடுமையான
வெயில், இரவில் குளிர் என மாறி மாறி வதைக்கும். இந்த திரைப்படத்திற்கு மேக் அப் போடுவதற்கு மட்டும் ஒவ்வொரு நாளும் 3-4 மணி செலவிடப்பட்டது. பா.ரஞ்சித் படங்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
சார்பட்டா பரம்பரையை விட இந்த படத்திற்கு பா.ரஞ்சித் அதிக உழைப்பை செலுத்தி
இருக்கிறார். தேசிய அளவிலும், உலக அளவிலும் இந்த படமானது முக்கிய இடத்தை பிடிக்கும் என நம்புகிறேன். பிதாமகன், ராவணன், ஐ போன்ற படங்களில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்தேன். ஆனால் இந்த திரைப்படத்தின் 3% கடினம் கூட அந்த திரைப்படங்களில் கிடையாது” என நடிகர் விக்ரம் கூறினார்.