உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம்? சமாஜ்வாதி எம்.பி. விமர்சனம்!
புனித குர்ஆனில் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு எதிராக பொது சிவில் சட்டம் இருக்குமானால், நாங்கள் அதை கடைப்பிடிக்க மாட்டோம் என சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஹெச்டி ஹசன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பல்வேறு மதங்கள் தங்களுக்கென மதச் சட்டங்களை பின்பற்றுகின்றன. அவற்றுக்குப் பதிலாக எல்லோரும் பின்பற்றும் வகையில் பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பாஜக அரசு பல ஆண்டுகளாக கூறி வருகிறது. அதாவது, அனைத்து மதத்தை சேர்ந்தவா்களுக்கும் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், சொத்துரிமை தொடா்பாக நாடு முழுவதும் ஒரே சட்டமாக பொது சிவில் சட்டத்தை கொண்டுவர முயற்சி செய்து வருகிறது. இதற்கு பல வகையில் ஆதரவுகளும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.
ஆனால், தொடர் எதிா்ப்பு, நீதிமன்ற வழக்குகள் காரணமாக இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியாத நிலை உருவானது. அண்மையில் இந்த பொது சிவில் சட்டத்தின் அவசியம் மற்றும் அதன் மீது பொதுமக்கள் மற்றும் மத அமைப்புகளிடம் இருந்து புதிதாக கருத்துகளைக் கேட்க பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் 22வது சட்ட ஆணையம் கொண்டுவரப்பட்டது.
தொடர்ந்து, பொது சிவில் சட்ட மசோதாவை, அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி இன்று (பிப். 06) உத்தரகாண்ட் சட்டசபையில் தாக்கல் செய்தார்.
இதனிடையே, சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஹெச்டி ஹசன், முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனின் கொள்கைகளுக்கு பொது சிவில் சட்டம் எதிரானது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “குர்ஆனில் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு எதிராக மசோதா இருக்குமானால், நாங்கள் அதை கடைப்பிடிக்க மாட்டோம். மாறாக அறிவுறுத்தல்களின்படி இருந்தால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை" என தெரிவித்துள்ளார்.