Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“வங்கக் கடலோரம் வா உடன்பிறப்பே!” - திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்

01:18 PM Feb 25, 2024 IST | Jeni
Advertisement

புதிதாக கட்டப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிட திறப்பு விழாவிற்கு வருமாறு திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள மடலில் கூறியிருப்பதாவது :

“யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். காரணம், யானைதான் காட்டின் வளத்தைப் பெருக்கும். இயற்கையின் சமச்சீரான நிலையைத் தக்கவைக்கும். தமிழ்நாட்டின் தாய் யானையாகத் திகழ்ந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. 95 ஆண்டுகாலம் வாழ்ந்தவர், 80 ஆண்டுகளுக்கு மேல் பொது வாழ்க்கைக்காகத் தன்னை அர்ப்பணித்தார். மெரினா கடற்கரையில் அவருக்குரிய இடத்தில், அவரது நினைவிடம் கலைத்திறனுடன் உருவாகியிருக்கிறது. பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெறவுள்ள அதன் திறப்புவிழாவுக்கு உடன்பிறப்புகளாம் உங்களை வரவேற்கக் கடமைப்பட்டுள்ளேன்.

தன்னை அரசியல் களத்தில் ஆளாக்கிய அண்ணாவுக்கு மட்டுமல்ல, அரசியல் களங்களில் மற்போர் போல சொற்போர் நடத்தினாலும் தமிழருக்கேயுரிய பண்பாட்டுடனும் நாகரிகத்துடனும் மாற்று இயக்கத்தின் தலைவர்கள் மறைந்தபோதும் அவர்களுக்கு நினைவிடம் அமைத்த அரசியல் பண்பாளர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் நினைவிடங்களை அமைத்தவர் கருணாநிதிதான். மாற்றுக் கருத்துடையவர்களேனும் அவர்தம் மனம் எதை விரும்பியதோ அதனையே நினைவிடத்தின் அடையாளமாக்கியவர் அவர். தேர்தல் களத்துப் பகையை நெஞ்சில் கொள்ளாமல், தன் காலத்துத் தலைவர்களுக்கு, உரிய மரியாதையுடன் நினைவிடம் அமைத்தவர்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஓய்வு கொள்ளும் இடத்தை ஒரு வரலாற்றுச் சின்னமாகக் கட்டியமைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் திமுக அரசு அதற்கான செயல்திட்டங்களை வகுத்தது. இந்தப் பணி அவரது ஆறாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வருவதற்கு முன்பாக நிறைவடைந்துள்ளது. எதையும் தாங்கும் இதயத்துடன் பேரறிஞர் அண்ணா துயில் கொள்ளும் சதுக்கமும் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இருபெரும் தலைவர்களால் நம் இனிய தமிழ்நாடு பெற்ற பயன்களை வாழும் தலைமுறையும், வருங்காலத் தலைமுறையும் அறிந்துகொள்ளும் வகையில் அறிவியல்ன் தொழில்நுட்பத்துடன் இணைந்த வரலாற்றுச் சின்னமாக வடிவமைக்கப்பட்டுள்ளன இந்நினைவிடங்கள்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் அருகே அமைக்கப்பட்டுள்ள நிலவறையில் பயணித்தால், அவர் வாழ்ந்த காலத்தில், நாமும் அவருடனேயே பயணிப்பது போன்ற அனுபவம் கிடைக்கும். என்றென்றும் நெஞ்சில் வாழ்ந்து, நம்மை இயக்கக்கூடிய தலைவரின் ஓய்விடம் வியக்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு, பிப்ரவரி 26-ஆம் நாள் திங்கட்கிழமை மாலை 7 மணியளவில் திறந்து வைக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள் : தொகுதி பங்கீடு : திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. இடையே இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை!

இந்நிகழ்வில், அவரின் உயிரினும் மேலான உடன்பிறப்புகளாம் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும். 'எழுந்து வா.. எழுந்து வா..' என்று கோபாலபுரம் இல்லத்தின் முன்பும், காவிரி மருத்துவமனை அருகே உள்ள சாலைகளிலும் நின்று முழக்கமிட்ட உடன்பிறப்புகள் நீங்கள்தானே..! தலைமுறைகள் கடந்த தலைவரான முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தமிழ் அலைகளின் தாலாட்டில், தன் அண்ணனின் தலைமாட்டில் ஓய்வெடுக்கிறார். அவரைக் காண வங்கக் கடலோரம் வருக உடன்பிறப்பே!”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மடலில் கூறியுள்ளார்.

Tags :
AnnaChennaiCMOTamilNaduDMKKarunanidhiMarinamemorialMKStalinopeningTNGovt
Advertisement
Next Article