"உரிமை கேட்க வா வா.. கடமை தீர்க்க வா வா.." - தொண்டர்களுக்கு அன்புமணி ராமதாஸ் அழைப்பு!
பாமகவின் முதல் சித்திரை முழுநிலவு மாநாடு கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்றது. தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு ‘சித்திரை முழுநிலவு மாநாடு’ இன்று (மே 11) நடைபெறுகிறது. மாமல்லபுரத்தில் இன்று மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ள இம்மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வந்தன. இம்மாநாட்டிற்கான சிறப்பு பாடல்கள், லட்சினை ஆகியவை சமீபத்தில் வெளியானது. இதற்கிடையே, சித்திரை முழுநிலவு மாநாட்டிற்கு வருகை தருபவர்களுக்கான அறிவுறுத்தல்களை காவல்துறை அண்மையில் வெளியிட்டிருந்தது.
மேலும், இந்த மாநாட்டிற்கு வருபவர்கள் பாதுகாப்பாகவும், அமைதியான முறையிலும் வருகை தருமாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று முன்தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். பாமகவின் முதல் சித்திரை முழுநிலவு மாநாட்டை ஒட்டி விழுப்புரம், செங்கல்பட்டு, புதுச்சேரியில் உள்ள அனைத்து மதுபான கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
பாமகவின் சித்திரை முழுநிலவு மாநாட்டை ஒட்டி மாமல்லபுரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் ஏராளமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், "உரிமை கேட்க வா வா.. கடமை தீர்க்க வா வா" என்ற பாடலை பதிவிட்டு சித்திரை முழுநிலவு மாநாட்டிற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். அதில், "உரிமை கேட்க வா வா கடமை தீர்க்க வா வா கரங்கள் சேர்க்க ஓடி நீ வா..... சித்திரை முழுநிலவு மாநாட்டிற்கு உன் அன்புமணி அழைக்கிறேன் வா…" என குறிப்பிட்டுள்ளார்.