பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கல்லூரி மாணவி புகார் அளித்த விவகாரம் | #Dindigul மாவட்ட காவல்துறை அதிர்ச்சித் தகவல்!
தேனியில் கல்லூரி மாணவி ஒருவரை மர்ம கும்பல் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் இதுபோன்ற சம்பவம் ஏதும் நடைபெறவில்லை என போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தேனி உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கானாவிலக்கு பகுதியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். இந்த மாணவி மர்ம கும்பல் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் மாணவியை அங்கிருந்து அழைத்துச் சென்று, திண்டுக்கல் ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு தப்பி சென்றதாகவும் பாதிக்கப்பட்ட மாணவி திண்டுக்கல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில், இதுபோன்ற சம்பவம் நடைபெறவில்லை எனவும், அந்த மாணவி மனஅழுத்தம் காரணமாக தவறான புகார் அளித்துள்ளார் எனவும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி நேற்று தனது வீட்டிலிருந்து கல்லூரி செல்வதற்காக பேருந்து மூலம் தேனி பழைய பேருந்து நிலையம் வந்து இறங்கி அருகிலிருந்த கழிவறைக்கு சென்ற போது அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை இன்னோவா காரில் கடத்தி தன்னை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாகவும், பின்னர் தன்னை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டதாகவும், தான் ஒரு ஆட்டோ மூலம் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையம் வந்து புகார் அளித்துள்ளார்.
மேற்படி புகாரை பெற்று விசாரணை செய்து இது தொடர்பாக திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண். 16/24 u/s 87, 70(1) BNS வழக்குப் பதிவு செய்து மேற்படி மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், விசாரணை செய்ததில் அம்மாணவி கூறியது போல் எந்தவொரு கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் நடைபெறவில்லை என்பதும், அம்மாணவி மனஅழுத்தம் காரணமாக தவறான புகார் அளித்துள்ளார் என்பதும் தெரியவருகிறது."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.