Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கருணாநிதி உருவம் பொறித்த நாணயம் நாளை வெளியீடு! மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுகிறார்!

08:14 AM Aug 17, 2024 IST | Web Editor
Advertisement

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவம் பொறித்த ரூ.100 நாணயம் நாளை வெளியிடப்பட உள்ளது.

Advertisement

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. இந்த நாணயத்தை சென்னை கலைவாணர் அரங்கில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (ஆக.18) நடைபெறும் விழாவில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுகிறார்.

இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய மடலில் தெரிவித்திருப்பதாவது, "நூற்றாண்டு நாயகர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை என்றென்றும் நம் உள்ளத்தில் வைத்துக் கொண்டாடுகிறோம். 5 முறை முதலமைச்சராக இருந்து, நவீன தமிழ்நாட்டைக் கட்டமைத்தவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாவட்டம்தோறும் நூற்றாண்டுவிழா கொண்டாடப்படுகிறது.

வங்கக் கடற்கரையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அருங்காட்சியகத்துடன் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதி பெயரால், சென்னையில் பன்னோக்கு மருத்துவமனை, மதுரையில் நூற்றாண்டு நூலகம், கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் போன்றவை அவரது நூற்றாண்டில் உருவாக்கப்பட்டுள்ளன.

 

இந்தியாவின் கூட்டாட்சிக் கருத்தியலை வலுப்படுத்த, மாநில சுயாட்சியின் உரிமைக்குரலாக முழங்கியவரும், பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவரும், பல குடியரசுத் தலைவர்களையும், பிரதமர்களையும் தேர்வு செய்வதில் முக்கியப் பங்காற்றியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

அவரது நூற்றாண்டில் அவரைப் போற்றும் வகையில், மத்திய அரசின் சார்பில் ஆக.18-ம் தேதி மாலை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று, கருணாநிதி உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை வெளியிட உள்ளார். நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர் அல்லாத ஒரு அரசியல் தலைவருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது கருணாநிதி மறைவின்போதுதான்.

பேரறிஞர் அண்ணா மறைவுக்குப்பின் அவரது நினைவாக வெளியிடப்பட்ட அஞ்சல் தலை போலவே, அவரது நினைவாக வெளியிடப்பட்ட நாணயத்திலும் ‘அண்ணாதுரை’ என்ற அவரின் கையெழுத்தை கருணாநிதிதான் இடம் பெறச்செய்தார். எந்த இடமாக இருந்தாலும் அங்கு தமிழுக்காக வாதாடியவர் கருணாநிதி. தனது 14-ம் வயதில் தமிழ்க்கொடி ஏந்தி, மொழிப் போர்க்களம் புகுந்த அவர்தான், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தமிழுக்கு இந்திய அரசின் செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைத் தேர்வு செய்து பாடச் செய்தார். தமிழாக வாழ்ந்த கருணாநிதியின் நூற்றாண்டு நினைவாக வெளியிடப்படும் ரூ.100 நாணயத்தில் கருணாநிதி உருவத்துடன், அவர் கையெழுத்திலான, ‘தமிழ் வெல்லும்’ என்ற சொற்களும் இடம்பெற்றுள்ளன.

இந்திய அரசு தனது நினைவாக வெளியிடும் நாணயத்தில் தமிழைப் பொறித்து நம் தாய்மொழிக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் கருணாநிதி. கருணாநிதியின் புகழ் மகுடத்தில் மற்றுமொரு வைரமாக அவரதுஉருவம் பொறித்த நாணயத்தை வெளியிடும் மத்திய அரசுக்கு, தமிழக முதலமைச்சராகவும், திமுகவின் தலைவராகவும், கருணாநிதியின் மகனாகவும் என் நன்றியையும், தொண்டர்களின் நன்றியையும் உரித்தாக்குகிறேன்.

மத்திய அரசு சார்பில் வெளியிடப்படும் நாணய வெளியீட்டு விழாவில், தொண்டர்களைக் காண ஆவலுடன் இருக்கிறேன். எளிய விழா என்பதால் சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சார்ந்த தொண்டர்கள் நேரில் காணவும், தமிழ்நாடு மற்றும் தமிழர்கள் வாழும் உலக நாடுகளிலும் நேரலையில் காணவும் அன்புடன் அழைக்கிறேன்."

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags :
Central Govtcm stalinCMO TAMIL NADUMK Stalintamil nadu
Advertisement
Next Article