#Coimbatore | மழை வெள்ளத்தில் சிக்கிய பேருந்து... பயணிகளின் நிலை என்ன?
கோவையில் சிவானந்த காலனி பகுதியில் தனியார் பேருந்து மழை நீரில் சிக்கிய நிலையில் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மத்திய கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று (அக்.13) வடமேற்கு திசைக்கு நகர்ந்து மத்திய அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளதாகவும், தென் தமிழக மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் தனித்தனி வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் காணப்படுவதாகவும், இதனால் அரபிக்கடலில் நிகழும் காற்றழுத்தம் மேற்கே நகர வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நாளை (அக். 14) உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் எனவும், அது வடதமிழ்நாட்டின் கரையோரம் நிலவக்கூடும் என்பதால் தமிழ்நாட்டிற்கு மிக கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. நாளை முதல் வரும் 16ம் தேதி வரை மிக கன மழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கோவை மற்றும் அதன் புறநகர பகுதிகளில் இன்று மாலை சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் வாகனங்கள் நீரில் மூழ்கிய நிலையில் அவை பழுதாகி சாலைகளில் ஆங்காங்கே நின்றது. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில், சங்கனூர் அருகே சிவானந்த காலனி பகுதியில் உள்ள ரயில்வே பாலத்தின் கீழ் மழைநீர் குளம் போல் தேங்கி இருந்தது. அப்போது, காந்திபுரம் வழியாக உக்கடம் முதல் பிரஸ் காலனி வரை செல்லும் தனியார் பேருந்து பயணிகளுடன் அந்த மழைநீரில் சிக்கிக்கொண்டது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர்.